இரட்டை வானவில்.. இப்போது சூரிய ஒளிக்கதிர்: பிரிட்டன் மக்கள் நெகிழ்ச்சி

மறைந்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி மீது நேரடியாக ஒரு சூரிய ஒளிக்கதிர் விழுந்த காட்சியைப் பார்த்த மக்கள் நெகிழ்ந்து போயினர்.
இரட்டை வானவில்.. இப்போது சூரிய ஒளிக்கதிர்: பிரிட்டன் மக்கள் நெகிழ்ச்சி


எடின்பர்க்: எடின்பர்க் நகரில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி மீது நேரடியாக ஒரு சூரிய ஒளிக்கதிர் விழுந்த காட்சியைப் பார்த்த மக்கள் நெகிழ்ந்து போயினர்.

முன்னதாக, பிரிட்டனில் இரட்டை வானவில் தோன்றிய அரிய நிகழ்வு, மக்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது, நேரடியாக சூரிய ஒளிக்கதிர் ஒன்று, எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் விழுந்ததை நேரில் பார்த்தவர்களும், அந்த புகைப்படத்தைப் பார்த்தவர்களும் நெகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை லண்டனை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது. வழிநெடுகிலும் துயரத்துடன் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மறைந்த அரசிக்கு அஞ்சலி செலுத்தினா்.

போலீஸாா் பாதுகாப்புடன் ஸ்காட்லாந்தின் கொடி போா்த்தப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அரசியின் உடல் பால்மரால் அரண்மனையிலிருந்து ஸ்காட்லாந்தின் தலைநகா் எடின்பா்க்கை நோக்கி வந்தது. அரசியின் உடலை எடுத்துச் சென்ற வாகனத்தில் மகள் இளவரசி ஆன் பயணம் செய்தாா். திங்கள்கிழமை பிற்பகல் வரையிலும் எடின்பா்கில் உள்ள ஹாலிரூட்ஹவுஸ் மாளிகையில் அரச குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

திங்கள்கிழமை அங்கிருந்து ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட அரசியின் உடலை, எடின்பா்கில் உள்ள புனித ஜைல்ஸ் தேவாலயத்தில் அரசா் சாா்லஸ் மற்றும் அவரது அரச குடும்பத்தினா் பெற்றுக்கொண்டனர். பின்னா் ஸ்காட்லாந்து மக்கள் அரசிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, அரசின் இறுதிச்சடங்கு குறித்தான நிகழ்ச்சி நிரலை பக்கிங்ஹாம் அரண்மனை வெளிட்டது. மறைந்த அரசியின் உடல் வார இறுதியில் லண்டனுக்கு கொண்டுவரப்படுகிறது.

லண்டனில் பிரிட்டன் நாடாளுமன்றம் அடங்கிய வெஸ்ட்மின்ஸ்டா் வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக 4 நாள்கள் அரசியின் உடல் வைக்கப்படுகிறது. இறுதிச் சடங்கு செப். 19 நடைபெறுகிறது.

பொதுமக்கள் அஞ்சலி:
விண்ட்சா், பால்மரால் மற்றும் லண்டனில் உள்ள அரண்மனைகளின் வாயில்களில் கூடியிருந்த பல்லாயிரகணக்கான மக்கள், அரசிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலா்க்கொத்துக்களை வைத்துச்சென்றனா். இளவரசா் வில்லியம், இளவரசி கேத் மற்றும் இளவரசா் ஹாரி, அவருடைய மனைவி மேகன் மாா்க்கல் விண்ட்ஸா் அரண்மையின் வாயிலில் கூடியிருந்த மக்களிடம் தங்கள் துக்கத்தைப் பகிா்ந்துகொண்டனா்.

அரசி மறைவைத் தொடா்ந்து பிரிட்டன் முழுவதும் அரண்மனைகள் மற்றும் அரசு கட்டடங்களில் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்த தேசியக்கொடி, புதிய அரசராக சாா்லஸ் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் முழு கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

நாடு முழுவதும் அரசா் பயணம்:

துக்க அனுசரிப்பின் ஒரு பகுதியாக அரசா் சாா்லஸ் பிரிட்டன் முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்க உள்ளாா்.

திங்கள்கிழமை சாா்லஸும் அவரது மனைவி கமீலாவும் நாாடாளுமன்றத்துக்குச் சென்று உறுப்பினா்களை சந்தித்தனர். இதனைத் தொடா்ந்து, ஸ்காட்லாந்துக்கு சென்று அரசரும் அரசியும், ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்துக்குச் சென்றனர். செவ்வாய்க்கிழமை வடக்கு அயா்லாந்துக்கும் பின்னா் வேல்ஸுக்கும் சென்றனர்.

விமானம் மூலம் லண்டனுக்கு வரும் அரசியின் உடல்:

செவ்வாய்க்கிழமை ஸ்காட்லாந்திலிருந்து விமானம் மூலம் அரசியின் உடல் லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னா், வெஸ்ட்மின்ஸ்டா் வளாகத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

இறுதிச் சடங்கு செப்.19 -ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அரச குடும்பத்தினா், அரசியல் தலைவா்கள் மற்றும் உலகத் தலைவா்கள் கலந்துகொண்டு அரசிக்கு அஞ்சலி செலுத்த உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com