
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவிற்காக அரசு ஏற்பாடு செய்துள்ள இறுதி மரியாதையில் பங்கேற்க அடுத்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் செல்ல உள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேச உள்ளார்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: “ பிரதமர் நரேந்திர மோடி வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி ஜப்பானில் அந்த நாட்டின் அரசு சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோவிற்கு நடத்தப்படும் இறுதி மரியாதையில் கலந்து கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின்போது ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவையும் அவர் தனியாக சந்தித்து பேச உள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளது.
ஜப்பான் அரசு தரப்பில் நடத்தப்படும் இந்த இறுதி மரியாதை விழா டோக்கியோவில் உள்ள நிப்பான் புடோகான் பகுதியில் நடைபெற உள்ளது.
ஜப்பான் இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றாகும். இரு நாடுகளும் குவாட் அமைப்பில் இணைந்து செயல்படுகின்றன. இந்த குவாட் அமைப்பில் இந்தியா மற்றும் ஜப்பான் தவிர அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இடையே சிறப்பான நட்புறவு இருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றிருந்தபோது ஜப்பானின் அப்போதைய பிரதமர் அபேவினை சந்தித்து அவரது இல்லத்திற்கு சென்றிருந்தார். இருவருக்கும் இடையேயான நட்பு இரு நாட்டின் வளர்ச்சிக்கும் சிறப்பானதாக அமைந்தது.
அபே கடந்த ஜூலை 8ஆம் தேதி ஜப்பானின் நாரா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதலுக்கு ஆளானார். அதன்பின், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.