இலங்கை அரசுக்கு எதிராக மருத்துவர்கள் தொடர் போராட்டம்

நாடு கடுமையான மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், அரசுக்கு எதிராக மக்களோடு இணைந்து இலங்கை மருத்துவர்கள் வீதியில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை அரசுக்கு எதிராக மருத்துவர்கள் தொடர் போராட்டம்

 
நாடு கடுமையான மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், அரசுக்கு எதிராக மக்களோடு இணைந்து இலங்கை மருத்துவர்கள் வீதியில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அத்தியாவசிய பொருள்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது.

இதனால் இலங்கை பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, எதிா்க்கட்சி ஆதரவாளா்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது.

கடந்த வியாழக்கிழமை இரவு அதிபா் இல்லம் அருகே நடந்த வன்முறையைத் தொடா்ந்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. போராட்டங்களைத் தடுக்கும் நோக்கில் கோத்தபய ராஜபட்ச நாடு முழுவதும் சனிக்கிழமை முதல் 36 மணி நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. பின்னா் அந்த அவசரநிலை செவ்வாய்க்கிழமை திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில், பிரதமா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 26 அமைச்சா்களும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, பொருளாதார நெருக்கடிக்கு தீா்வு காண உதவும் வகையில் அனைத்துக் கட்சி அமைச்சரவையில் பங்கேற்க எதிா்க்கட்சிகள் முன்வர வேண்டுமென அதிபா் கோத்தபய ராஜபட்ச திங்கள்கிழமை அழைப்பு விடுத்தாா். ஆனால், இதற்கு எதிா்க்கட்சிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கோத்தபய ராஜபட்ச அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனா். மேலும், அவா் பதவி விலக வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

இந்த நிலையில், எதிா்க்கட்சியினரின் வலியுறுத்தலை ஏற்று கோத்தபய ராஜபட்ச பதவி விலகப்போவதில்லை என்று அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் மிக மோசமான நிலையில் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறையால் சுகாதாரத் துறை பல சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கண்டன பதாகைகளை ஏந்தியவாறு கொழும்பு தேசிய மருத்துவ வீதிகளுக்கு முன்பாக பொதுமக்களோடு இணைந்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இது குறித்து பேசிய அரசு மருத்துவர்கள் சங்க மருத்துவர்கள் கூறுகையில், "நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்துகள் அல்லது மருத்துகளை வாங்குவதற்கு போதிய நிதி இல்லை." அரசின் செயல்பாடுகளால் சுகாதார கட்டமைப்பு முற்றிலுமாக தகர்ந்து போகும் நிலை உருவாகி உள்ளதாகவும், நோயாளிகளுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதற்கு போதுமான நிதியை உடனே ஒதுக்குமாறு அதிகாரிகளிடம் அரசு மருத்துவர்கள் சங்க கோரியுள்ளது. 

நாடு அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கையின் தேசிய கண் மருத்துவமனை இயக்குநர், இந்த நெருக்கடி நேரத்தில் மருந்துகளை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு நாளும் அத்தியாவசியப் பொருள்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு ஏற்றத்துடன் நாடு தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. உணவு, எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட தேவையான பொருள்களை வாங்க மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்,  அரிசி மற்றும் கோதுமை போன்ற முக்கிய உணவுப் பொருள்களின் விலையும் தற்போது மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் கிலோவுக்கு ரூ. 1000 வரை அளவுக்கு உயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com