வார நாள்களை விட வார இறுதியில் கரோனா பலி அதிகம்: அதிர்ச்சி தரும் காரணம்

ஒரு வைரஸை புரிந்துகொள்வதற்குள் அதன் உருமாற்றம் அடைந்த மற்றொரு வைரஸ் உருவாகி விடுகிறது.
வார நாள்களை விட வார இறுதியில் கரோனா பலி அதிகரிப்பு: அதிர்ச்சி தரும் காரணம்
வார நாள்களை விட வார இறுதியில் கரோனா பலி அதிகரிப்பு: அதிர்ச்சி தரும் காரணம்

கரோனா.. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக புரியாத புதிராகவே இருந்து கொண்டிருக்கும் வைரஸ். அது எப்படித் தாக்கும், யாரைத் தாக்கும் என்பதற்கெல்லாம் எந்த வரையறையும் இல்லை. ஒரு வைரஸை புரிந்துகொள்வதற்குள் அதன் உருமாற்றம் அடைந்த மற்றொரு வைரஸ் உருவாகி விடுகிறது.

முதல் இரண்டு அலைகளைப் போல அல்லாமல், அடுத்தடுத்த உருமாறிய வைரஸ்களால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாவிட்டாலும், சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருப்பது பல உலக நாடுகளை கலக்கமடையச் செய்கிறது.

இந்த நிலையில், கரோனா பலி எண்ணிக்கை குறித்து கனடாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், வார நாள்களில் ஏற்படும் கரோனா பலியை விட, வார இறுதியில் நாள்களில் பலி எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கனடாவின் டோரண்டோ பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், கரோனா பேரிடர் காலத்தின்போது, வார நாள்களைக் காட்டிலும் வார இறுதி நாள்களில் அதிக பலி எண்ணிக்கை இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில், கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் சராசரியை ஒப்பிட்டுப் பார்த்தால், வார நாள்களை (8,083)ஒப்பிடுகையில்,  வார இறுதியில் (8,532) அதிகமாக இருந்தது புள்ளிவிவரங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒன்றிரண்டு நாள்களில் எடுக்கப்பட்ட ஆய்வு அல்ல. 2020ஆம் ஆண்டு மார்ச் 7 முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி வரை உலகம் முழுவதும் பதிவான கரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக உலக சுகாதார அமைப்பு பராமரித்து வந்த புள்ளிவிவரங்களை தனித்தனியாக ஆய்வு செய்ததில் கிடைக்கப்பெற்றுள்ளது.

போர்ச்சுகலில் வெளியான மருத்துவ இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில்,

அமெரிக்காவில் கரோனா பலி சராசரி வார இறுதியில் 1,483 ஆகவும், வார நாள்களில் 1,220 ஆகவும் இருந்தது. இது வார இறுதியில் 22 சதவீதம் பலி எண்ணிக்கை அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது.

இதேதான். பிரேசிலிலும். வார நாள்களில் 823 ஆகவும், வார இறுதியில் 1,061 ஆகவும் அதாவது 29% அதிகமாக இருந்துள்ளது.
பிரிட்டனிலும் வாரத்தில் 215 ஆக இருக்கும் பலி, வார இறுதியில் 239 ஆக அதிகரித்திருக்கிறது. இது 11 சதவீதம் அதிகமாகும்.

ஆனால் இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தவில்லை. ஒரு சில நாடுகள் இதில் விதிவிலக்காக உள்ளன. உதாரணமாக ஜெர்மனி. இங்கு வார இறுதியில் குறைவான பலி எண்ணிக்கையே பதிவாகியுள்ளது.

இதற்கு காரணமாக எது அமைந்திருக்கும் என்று ஆராயப்பட்டதில், வார நாள்களோடு ஒப்பிடுகையில் வார இறுதியில் மருத்துவமனைகளில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை, பணியாற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை மற்றும் அனுபவமிக்க மருத்துவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனையின் உள்கட்டமைப்புகளை பயன்படுத்தும் விகிதம் உள்ளிட்டவையே காரணிகளாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்மூலம், உலக நாடுகள் பலவும் தங்களது மருத்துவ உள்கட்டமைப்புகளை போதுமான வகையில் மேம்படுத்தினால் மட்டுமே இந்த சிக்கலிலிருந்து விடுபடலாம் என்பது தெரிய வருகிறது.. மருத்துவமனைகள் வாரத்தின் அனைத்து நாள்களுமே ஒன்றுபோல இயங்குவதற்குத் தேவையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com