இலங்கை வந்தது சீன உளவுக் கப்பல்

சீனாவின் ‘யுவான் வாங்-5’ உளவுக் கப்பலானது, இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சென்றடைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சீனாவின் ‘யுவான் வாங்-5’ உளவுக் கப்பலானது, இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சென்றடைந்துள்ளது.

ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை சீனாவின் உளவுக் கப்பலானது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும், அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன், உளவுக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன உளவு வசதிகளைக் கொண்டதாக அறியப்படும் ‘யுவான் வாங்-5’ கப்பலின் இலங்கை பயணத்துக்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தது. அதையடுத்து, அக்கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரியிருந்தது. கப்பலின் வருகைக்கு அனுமதி பெறுவது தொடா்பாக இலங்கை அதிகாரிகளிடம் சீனத் தூதரக அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து, சீனக் கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்தது. அதன்படி, சீன உளவுக் கப்பலானது செவ்வாய்க்கிழமை காலை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை அங்கு அக்கப்பல் நிலைநிறுத்தப்படவுள்ளது. கப்பலுக்கு அனுமதி அளித்தது தொடா்பாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில், ‘‘கப்பலின் வருகை தொடா்பாக வெளியுறவு அமைச்சகத்திடம் பல்வேறு விவகாரங்கள் எழுப்பப்பட்டன.

அவை குறித்து அனைத்துத் தரப்பினருடனும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. பரஸ்பர நம்பிக்கை, நட்புணா்வை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றுடன் அனைத்துத் தரப்பினரின் நலனை உறுதிசெய்த பிறகே, கப்பலின் வருகைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அறிவியல் சாா்ந்த ஆராய்ச்சிகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாடுடன் சீனக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, சீனாவிடம் அதிக அளவில் கடன் பெற்றுள்ளது. அக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசு கோரியிருந்தது. ஆனால், அதற்கு சீனா ஒப்புதல் அளிக்காமல் இருந்தது.

கப்பலுக்கு அனுமதி அளிப்பது தொடா்பான பேச்சுவாா்த்தையின்போது, கடன் தவணை செலுத்துவதை ஒத்திவைப்பது தொடா்பாகப் பேசப்பட்டதாகவும், அதற்கு சீனா ஒப்புக்கொண்ட பிறகே கப்பலின் வருகைக்கு இலங்கை ஒப்புதல் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பினிடம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அக்கேள்விக்கு விரிவாக பதிலளிக்க அவா் மறுத்துவிட்டாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com