
உக்ரைனின் சுதந்திர நாளான இன்று ரஷியா தீவிர தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் நாடு சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து இன்றுடன் 31 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்தவகையில் உக்ரைனின் 31 ஆவது ஆண்டு சுதந்திர நாள் இன்று.
அதேநேரத்தில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்து இன்றுடன் 6 மாதங்கள் நிறைவடைகிறது.
அமெரிக்காவின் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து ரஷியா போர் தொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த போரில் இரு தரப்பிலும் இழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன.
ரஷியா வலிமை மிகுந்த நாடாக இருந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியால் உக்ரைன் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
இந்நிலையில் போர் நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் சுதந்திர நாளை அமைதியான முறையில் உக்ரைன் கொண்டாடி வருகிறது.
சுதந்திர நாளில் உக்ரைன் மீது தீவிர தாக்குதலை நடத்த ரஷியா திட்டமிட்டிருப்பதாகவும் வான்வழித் தாக்குதல் அதிகம் இருக்கலாம் என்றும் எற்கெனவே உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க புலனாய்வு அமைப்பும் இதுகுறித்து எச்சரித்துள்ளது.
தேச ஒற்றுமையுடன் நாட்டின் மீதான மிகவும் பயங்கரமான அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் இன்று ரஷியாவின் அச்சுறுத்தல் காரணமாக தலைநகர் கீவில் பொதுக் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. பல மாதங்களாக தாக்குதலை எதிர்கொண்ட கார்கீவ் நகரத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் கூடவும் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர நாளிலும் கொண்டாட்டமில்லாத, அதேநேரத்தில் போர் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறது உக்ரைன்.
இதையும் படிக்க | உக்ரைன் மக்களை எச்சரித்த அதிபர்...