
கோப்புப்படம்
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பனிப்பாறைகள் கடந்த 80 ஆண்டுகளில் 51 சதவிகிதம் உருகி மறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்ற பாதிப்புகள் கடந்த சில தசாப்தங்களாக உலகம் முழுவதும் உணரப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களினால் சூழலியல் பேரிடர்கள் நிகழ்ந்துவருவது தொடர்கதையாகி வருகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக பனிப்பாறைகள் உருகி மறைந்து வருவது தற்போது தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிக்க | சூடான்: மழை, வெள்ள பலி எண்ணிக்கை 89-ஆக உயா்வு
இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பனிமலைகள் காலநிலை மாற்றத்தின் காரணமாக வேகமாக மறைந்துவருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் சுவிட்சர்லாந்து கூட்டு வன நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் 1930ஆம் ஆண்டிலிருந்து ஆல்ப்ஸ் மலைத்தொடரின் 51.5 சதவிகித பனிமலைகள் உருகியுள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க | பாதுகாப்பான அணு உலைகள்: ஜப்பான் அரசு பரிசீலனை
புவி வெப்பமயமாதலினால் ஒவ்வொரு ஆண்டும் 0.73 கனசதுர கிலோமீட்டர் பனிப்பாறைகள் உருகி வருவதாகத் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 12 சதவிகித பனிப்பாறைகள் உருகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேசமயம் ஒட்டுமொத்தமாக ஆல்ப்ஸ் மலைகளில் பனிகள் உருகவில்லை எனக் குறிப்பிட்டுள்ளதுடன் முந்தைய நிலைகளைக் காட்டிலும் பனி உருகுதல் விகிதம் தொடர்ந்து வேகமெடுத்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.