தனது கவனிப்பில் இருந்த 20 நிறைமாத கர்ப்பிணிகளைக் காக்க போராடிய அஞ்சலி கூறுகையில், மருத்துவமனைக்கு அருகே இருக்கும் ரயில் நிலையத்தை பயங்கரவாதிகள் சுற்றிவளைத்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. அவசரநிலையை எதிர்கொள்ளத் தயாராகுமாறு எங்களுக்கு அறிவுறுத்தல் வந்தது. 10.30 மணியளவில் துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தம் கேட்டது. பயங்கரவாதிகள் மருத்துவமனைக்குள் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திய போது, எனது உதவியாளருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக முதல் தளத்துக்குச் சென்று கீழ்தளத்திலிருந்து மேலே வருவதற்கான நுழைவு வாயிலில் இருந்த இரும்புக் கதவைப் பூட்டினேன். பிறகு முதல் தளத்திலிருந்த நோயாளிகளை சமையலறைக்கு மாற்றினோம். பிறகு அனைத்து அறைகளின் விளக்குகளையும் அணைத்துவிட்டேன். அப்போதுதான் பயங்கரவாதிகள் அங்கு வந்தாலும், நோயாளிகள் அங்கு இருப்பதை தெரிந்து கொள்ள முடியாது என்று நினைத்தேன்.