'கூண்டில் இடப்பட்ட பறவைகள் ஆனோம்': ஆப்கன் மாணவிகள் கண்ணீா்

கூண்டில் இடப்பட்ட பறவைகள் போல ஆனோம் என்று ஆப்கனில், பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல தடை விதித்திருப்பது குறித்து பெண்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
'கூண்டில் இடப்பட்ட பறவைகள் ஆனோம்': ஆப்கன் மாணவிகள் கண்ணீா்

கூண்டில் இடப்பட்ட பறவைகள் போல ஆனோம் என்று ஆப்கனில், பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல தடை விதித்திருப்பது குறித்து பெண்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

ஆப்கன் பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தலிபான் ஆட்சியாளா்கள் விதித்த தடையை பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை அமல்படுத்தினர்.

இந்த தடை உத்தரவையடுத்து, அனைத்துக் கல்லூரி வாயில்களிலும் தலிபான்கள் கையில் துப்பாக்கியுடன் காத்திருந்தனர். நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவிகள், வாயில்களிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். 

பல மாணவிகளுக்கு கல்லூரிக்கு வரும் வரை, இப்படி ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது கூட தெரியவில்லை. கல்லூரிக்குள் செல்ல முடியாது. கல்வி கற்க முடியாது என்று தெரிந்ததும். மாணவிகள் ஒருவரை ஒருவா் தழுவி கண்ணீா் விட்ட காட்சி சமூக வலைதளங்களில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

முன்னதாக, தனியாா் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில உடனடியாகத் தடை விதிக்கப்படுவதாக தலிபான் அரசு அறிவித்தது. எனினும், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

இது குறித்து செவிலியர் படிப்பில் படித்து வந்த மாணவி, நாங்கள் அனைவரும் கூண்டிலிடப்பட்ட பறவைகள் போல துடிக்கிறோம். ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கதறுகிறோம். கத்துகிறோம். அழுகிறோம். ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது? என்று கேள்வி எழுப்புகிறார்.

ஏற்கனவே பள்ளிகளில் மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, பெரும்பாலான பெண்கள் வீட்டில் முடக்கப்பட்டுவிட்டனர். தற்போது கல்லூரிகளிலிருந்தும் பெண்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்டனர்.

இது குறித்து ஒரு மாணவர் கூறுகையில், தலிபான்களின் அறிவிப்பு இரவே கிடைத்துவிட்டது. ஆனால், என் தங்கையிடம் சொல்லவில்லை. அவர் மிகுந்த வேதனைப்படுவார் என்று. இன்று கல்லூரிக்குச் சென்ற போது அங்கிருந்து திருப்பி அனுப்பிவிட்டார்கள் இப்படியே சென்று கொண்டிருந்தால் எங்கள் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்கிறார் பயந்தபடி. 

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு அந்த நாட்டு ஆட்சியைக் கடந்த ஆண்டு கைப்பற்றிய தலிபான்கள், தங்களது முந்தைய ஆட்சியைப் போலின்றி அனைவருக்கும் உரிய உரிமைகள் அளிக்கப்படும் என்று வாக்களித்தனா். அதனை மீறி அவா்கள் பெண்களின் உயா் கல்விக்கு தடை விதித்துள்ளதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com