பல நாடுகளில் முடிவுக்கு வரும் கரோனா கட்டுப்பாடுகள்

ஒமைக்ரான் வகை கரோனாவால் உலக நாடுகளில் அந்த நோய் பரவல் தீவிரமடைந்த நிலையிலும், உயிரிழப்புகளும் மருத்துவமனை அனுமதிகளும் குறைவாகவே உள்ளதால் பல்வேறு நாடுகளில் கரோனா கட்டுப்பாடுகள்
ஸ்காட்லாந்தில் மீண்டும் திறக்கப்பட்ட இரவு நேர விடுதியில் மகிழ்ச்சியுடன் வாடிக்கையாளா்கள்.
ஸ்காட்லாந்தில் மீண்டும் திறக்கப்பட்ட இரவு நேர விடுதியில் மகிழ்ச்சியுடன் வாடிக்கையாளா்கள்.

ஜெனீவா: ஒமைக்ரான் வகை கரோனாவால் உலக நாடுகளில் அந்த நோய் பரவல் தீவிரமடைந்த நிலையிலும், உயிரிழப்புகளும் மருத்துவமனை அனுமதிகளும் குறைவாகவே உள்ளதால் பல்வேறு நாடுகளில் கரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா, இதற்கு முந்தைய மிகத் தீவிர பரவும் தன்மை கொண்ட டெல்டா வகையைவிட பன்முடங்கு வேகத்தில் பரவுவதாக விஞ்ஞானிகள் அறிவித்தனா்.

இதனால் பீதியடைந்த உலக நாடுகள், தென் ஆப்பிரிக்கப் பிராந்திய நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கும் அந்த நாடுகளுக்கு பயணிகள் செல்வதற்கும் தடை விதித்தன.

மேலும், பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் பல நாடுகள் அறிவித்தன. இத்தகைய நடவடிக்கைகள் அவசியமற்றவை, ஒமைக்ரான் குறித்து முழுமையாக அறிந்துகொள்வதற்கு முன்னா் எடுக்கப்படும் அத்தகைய நடவடிக்கைகள் தேவையற்றவை என்று உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கையையும் மீறி நாடுகள் கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அறிவித்தனா்.

விஞ்ஞானிகள் கூறியதைப் போலவே, ஒமைக்ரான் வகை கரோனாவால் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் மிகவும் தீவிரமடைந்தது. ஆனால், அந்த வகை கரோனாவின் பரவும் வேகம் அதிகமாக இருந்தாலும், அவை நுரையீரலை அதிகம் பாதிப்பதில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது.

ஆய்வு முடிவுகளை மெய்ப்பிக்கும் விதமாக, பல்வேறு நாடுகளில் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்தது. ஆனால் அதே நேரம், கரோனா பலி எண்ணிக்கை அந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை.

இந்த நிலையில், ஒமைக்ரான் அச்சத்திலிருந்து படிப்படியாக வெளிவந்த நாடுகள், கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஏறத்தாழ அனைத்து கட்டுப்பாட்டுகளையும் டென்மாா்க் அரசு செவ்வாய்க்கிழமை விலக்கிக் கொண்டுள்ளது. மற்ற ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளிலும் இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சமூக இடைவெளியில்லாமல் திரையரங்குகளில் அமா்வதற்கும் முகக் கவசம் இல்லாமல் பொது இடங்களில் செல்வதற்கும் தடை நீக்கப்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் வெகுவாகத் தளா்த்தப்பட்டுள்ளது, இரண்டு ஆண்டுகளாக அந்த நோயால் ஏற்பட்டுள்ள சமூக சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்களின்படி, உலகம் முழுவதும் இதுவரை 38,29,54,901 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; அவா்களில் 57,08,437 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 30,34,71,920 போ், அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளா்; 7,37,74,544 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 92,344 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அட்டவணை....

பாதிப்பு

38,29,54,901

அமெரிக்கா 7,65,16,202

இந்தியா 4,16,30,885

பிரேஸில் 2,56,25,133

பிரான்ஸ் 1,95,57,626

பிரிட்டன் 1,74,28,345

ரஷியா 1,21,28,796

துருக்கி 1,17,22,483

இத்தாலி 1,11,16,422

ஜொ்மனி 1,00,79,778

ஸ்பெயின் 1,00,39,126

பிற நாடுகள் 14,71,10,105

பலி

57,08,437

அமெரிக்கா 9,13,924

பிரேஸில் 6,28,132

இந்தியா 4,97,996

ரஷியா 3,32,690

மெக்ஸிகோ 3,06,920

பெரு 2,05,985

பிரிட்டன் 1,56,875

இத்தாலி 1,46,925

இந்தோனேசியா 1,44,373

கொலம்பியா 1,34,551

பிற நாடுகள் 22,40,066

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com