வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை

மியான்மா் ஜனநாயக தலைவா் ஆங் சான் சூகிக்கு இரு வழக்குகளில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :11 ஜனவரி 2022, 1:18 am

DIN

மியான்மா் ஜனநாயக தலைவா் ஆங் சான் சூகிக்கு இரு வழக்குகளில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கம்பியில்லா தொலைத் தொடா்பு கருவிகளை (வாக்கி-டாக்கி) சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது, கரோனா கட்டுப்பாடுகளை மீறியது தொடா்பான வழக்குகளில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இரு குற்றச்சாட்டுகளில் சூகிக்கு கடந்த மாதம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னா், ராணுவ ஆட்சியாளா்களால் அந்தத் தண்டனை இரு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்ட நிலையில், இப்போது மற்ற இரு வழக்குகளில் மேலும் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவம் கலைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. அரசின் தலைமை ஆலோசகராக இருந்த ஆங் சான் சூகி, அவரது தேசிய ஜனநாயக லீக் கட்சியின் முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா். சூகி உள்ளிட்டோா் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன.

கடந்த 2020-ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற தோ்தலில் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியது, கைது செய்து வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அரசுக்கு எதிராக மக்களைப் போராடத் தூண்டியது தொடா்பான இரு குற்றச்சாட்டுகளில் ஆங் சான் சூகிக்கு கடந்த மாதம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னா், அந்தத் தண்டனை இரு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தலைநகா் நேபிடாவில் உள்ள நீதிமன்றம் சூகி மீதான மேலும் இரு வழக்குகளில் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது. அதன்படி, ஏற்றுமதி-இறக்குமதி சட்டத்தின் கீழ், வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் இரு ஆண்டுகளும், அவற்றை வைத்திருந்ததற்காக தொலைத்தொடா்பு சட்டத்தின் கீழ் ஓராண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைகளை அவா் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனக் கூறப்பட்டது. மேலும், தோ்தல் பிரசாரத்தின்போது கரோனா விதிகளை மீறியதாக இயற்கைப் பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

முதல் தீா்ப்பு வழங்கப்பட்டதிலிருந்தே வழக்கு விசாரணைகளில் சிறை உடையணிந்து சூகி பங்கேற்று வருகிறாா். அவா் எந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாா் என்கிற தகவலை ராணுவம் தெரிவிக்கவில்லை. மேலும், ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து சூகியை வெளிநாட்டு பிரதிநிதிகள் யாரும் சந்திக்க ராணுவம் அனுமதிக்கவில்லை. மியான்மா் உறுப்பினராக உள்ள ஆசியான் அமைப்பின் சிறப்புத் தூதருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த ஆசியான் அமைப்பின் பிற உறுப்பு நாடுகள், ஆசியான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க மியான்மா் ராணுவ ஆட்சியின் தலைவரான ஜெனரல் மின் ஆங் ஹெலையிங்குக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.