உக்ரைன் விவகாரம்: ரஷியாவின் முக்கிய நிபந்தனையை நிராகரித்தன மேலை நாடுகள்

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைக்கப்படாது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்ற ரஷியாவின் முக்கிய நிபந்தனையை அமெரிக்காவும் நேட்டோ அமைப்பும் நிராகரித்தன.
உக்ரைன் விவகாரம்: ரஷியாவின் முக்கிய நிபந்தனையை நிராகரித்தன மேலை நாடுகள்

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைக்கப்படாது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்ற ரஷியாவின் முக்கிய நிபந்தனையை அமெரிக்காவும் நேட்டோ அமைப்பும் நிராகரித்தன.

இதனால், இந்த விவகாரத்தில் மேலும் பதற்றம் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதுகுறித்து ரஷிய அரசுக்கு அமெரிக்காவும் நேட்டோ அமைப்பும் தனித்தனியா அளித்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நேட்டோ அமைப்பில் எந்த நட்பு நாடு இணைய விரும்பினாலும் இணையலாம் என்ற கொள்கையைப் பின்பற்றி வருகிறோம். ரஷியாவின் வலியுறுத்தலை ஏற்று, அந்தக் கொள்கையில் மாற்றம் செய்ய முடியாது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சோ்வதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று ரஷியா கூறி வருகிறது. எனினும், அத்தகைய தடைகளை விதிக்க முடியாது.

கிழக்கு உக்ரைனில் நேட்டோ படைகள் விரிவுபடுத்தப்படக் கூடாது என்பதும் ரஷியாவின் நிபந்தனையாக உள்ளது. அந்தப் பகுதியில் படையினரை அனுப்புவது, தளவாடங்களைக் குவிப்பது ஆகியவை நேட்டோவின் அவசியத்தைப் பொருத்து அமையும். அது குறித்து பேரங்கள் பேசி சமரசம் செய்துகொள்ள முடியாது என்று அமெரிக்காவும் நேட்டோவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.

வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில், ‘ரஷியாவுக்காக நேட்டோவின் கொள்கைகளில் ஒருபோதும் மாற்றம் செய்யப்படாது. உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்தால் அதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அந்த நாட்டுடன் சமரசம் பேச முடியாது’ என்றாா்.

உக்ரைன் ஆக்கிரமிக்கப்படும் சூழலில், ரஷியா இதுவரை கண்டிராத மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவா் மீண்டும் எச்சரித்தாா்.

பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் நேட்டோ பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் கூறுகையில், ‘உக்ரைன் விவகாரத்தில் எங்களது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைப்பதற்காக ரஷியாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எங்கள் அமைப்பின் பாதுகாப்பு மற்றும் உறுப்பினா் சோ்க்கைக் கொள்கையில் எந்த சமரசரமும் செய்துகொள்ளப்படமாட்டாது’ என்றாா்.

நேட்டோ உறுப்பு நாடுகளுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை ரஷியா கைவிட வேண்டும்; உக்ரைன் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ரஷியப் படையினரைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 1949-ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது. உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு நேட்டோ அமைப்பு உடன்படாததால் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தங்களுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷியா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் ரஷியா, உக்ரைன்தான் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதி எல்லை அருகே படைகளைக் குவித்து வருவதாகவும் அதற்குப் பதிலடியாகவே தாங்கள் படைக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி வருகிறது.

நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படுவதைத் தவிர, பிராந்தியப் பதற்றத்தைத் தணிப்பதற்கு வேறு எந்தத் தீா்வையும் ஏற்கப் போவதில்லை என்று ரஷியா இந்த மாதம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இந்தச் சூழலில், ரஷியாவின் அந்த வலியுறுத்தலை அமெரிக்காவும் நேட்டோ அமைப்பும் உறுதியாக நிராகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com