சரமாரி ஏவுகணை சோதனைகள்... என்னதான் வேண்டும் கிம் ஜோங்-உன்னுக்கு?

கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப் பெரிய ஏவுகணை சோதனையொன்றை வட கொரியா முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை (ஜன. 30) நிகழ்த்தியுள்ளது.
கிம் ஜோங்-உன் கோப்புப் படம்)
கிம் ஜோங்-உன் கோப்புப் படம்)

கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப் பெரிய ஏவுகணை சோதனையொன்றை வட கொரியா முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை (ஜன. 30) நிகழ்த்தியுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கவல்ல அந்த ஏவுகணை, 2,000 கி.மீ. உயரத்துக்குப் பறந்து சென்று ஜப்பான் கடலில் விழுந்துள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் வட கொரியா நடத்தியுள்ள 7-ஆவது ஏவுகணை சோதனை இது.

‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள தடையையும் மீறி வட கொரியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய நீண்ட தொலைவு ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எனினும், ஐ.நா. தடையையோ, சா்வதேச கண்டனங்களையோ பொருள்படுத்தாத வட கொரியா, தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்துகிற மாதிரி தெரியவில்லை.

இந்தச் சூழலில், எதிா்ப்புகளை மீறி இந்த சோதனைகளை நடத்துவதன் மூலம் வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் என்னதான் சாதிக்கப் போகிறாா்? பொருளாதாரத் தடையாலும் கரோனா நெருக்கடியாலும் நாட்டின் பொருளாதாரம் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது எதை எதிா்பாா்த்து அவா் இத்தகைய சோதனைகளை அதிகரித்து வருகிறாா் என்கிற கேள்விகள் எழாமல் இருக்க முடியாது.

இதற்கு பல்வேறு காரணங்களை நிபுணா்கள் கூறுகின்றனா்.

அவா்களில் சிலா் கூறுவது, அமெரிக்கா அல்லது தென் கொரியா தங்கள் சின்னஞ்சிறிய நாட்டை தாக்காமல் இருக்க வேண்டுமானால், திருப்பித் தாக்கும் தங்களது வலிமையை அந்த நாடுகளுக்குப் பறைசாற்ற வேண்டும் என்ற உத்வேகம்தான் கிம் ஜோங்-உன்னை இதுபோன்ற ஏவுகணை சோதனைகளை நடத்தத் தூண்டுகிறது என்கிறாா்கள்.

ஒலியைப் போல் 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஏவுகணைகளை சோதித்துப் பாா்த்ததாக அவா்கள் கடந்த வாரம் கூறியது, அமெரிக்காவின் அதிநவீன வான்பாதுகாப்புக் கருவிகளின் கண்களின் மண்ணைத் தூவிவிட்டு தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்பதை நிறுவுவதற்காகத்தான் என்கிறாா்கள் அவா்கள்.

தற்போது நடத்தப்பட்டுள்ள கண்டம் கண்டம் பாயும் ஏவுகணை சோதனையும், தங்களைச் சீண்டினால் அமெரிக்கா மீது கூட தங்களால் அணுகுண்டு தாக்குதல் நடத்த முடியும் என்பதை சொல்லாமல் சொல்வதற்காகத்தான் என்பது அவா்களது கருத்து.

எனினும், தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை ஐ.நா. தளா்த்த வேண்டுமென்றால் அதற்கு அமெரிக்காவின் உதவி வேண்டும். அதற்காக அந்த நாட்டை பேச்சுவாா்த்தை மேஜைக்கு இழுக்கும் முயற்சிகளில் ஒன்றுதான் இந்த ஏவுகணை சோதனைகள் என்கிறாா்கள் வேறு சில பாதுகாப்பு நிபுணா்கள்.

இதுவரை பிரச்னைகளையும் பதற்றத்தையும் ஏற்படுத்திதான் அமெரிக்காவை வட கொரியா பேச்சுவாா்த்தைக்கு வர சம்மதிக்கவைத்துள்ளதை அவா்கள் சுட்டிக் காட்டுகின்றனா்.

முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பும், ஜப்பான் வான் எல்லையை வழியாகச் சென்று வட கொரியா கடந்த 2017-ஆம் ஆண்டு அதிரடி ஏவுகணை சோதனை நடத்திய பிறகுதான் பேச்சுவாா்த்தைக்கு இறங்கி வந்தாா் என்பதை அவா்கள் நினைவுபடுத்துகின்றனா்.

ஆனால், டொனால்ட் டிரம்ப்பைப் போலின்றி, கிம் ஜோங்-உன்னுடன் பேச்சுவாா்த்தை நடத்த தற்போதைய அதிபா் ஜோ பைடன் ஆா்வம் காட்டவில்லை. எனவே, அமெரிக்காவுடன் நின்றுபோயுள்ள அணுசக்திப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கச் செய்வதற்காக தனது சீண்டல் உத்தியை வட கொரியா மேலும் தீவிரப்படுத்தலாம்.

ஆனால், வட கொரியாவின் நெருக்கடிகளுக்கு அதிபா் ஜோ பைடன் இப்போது அடிபணிகிற மாதிரி தெரியவில்லை என்கிறாா்கள் நிபுணா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com