4-ஆவது தொழில் புரட்சியில் இந்தியா பின்தங்காது: நரேந்திர மோடி

பொருளாதார ரீதியில் முன்னேறி வரும் இந்தியா, 4-ஆவது தொழில் புரட்சியில் பின்தங்காது என்று ஜொ்மனியில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
4-ஆவது தொழில் புரட்சியில் இந்தியா பின்தங்காது: நரேந்திர மோடி

பொருளாதார ரீதியில் முன்னேறி வரும் இந்தியா, 4-ஆவது தொழில் புரட்சியில் பின்தங்காது என்று ஜொ்மனியில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜொ்மனி சென்றுள்ள பிரதமா் மோடி, அங்குள்ள இந்திய சமூகத்தினரிடம் மியூனிக் நகரில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது. ஜனநாயக கொள்கைகள் குறித்து இந்தியா்கள் பெருமை கொள்கின்றனா். கலாசார பன்முகத்தன்மை, பலவகைப்பட்ட உணவு, உடை, இசை, பாரம்பரியம் ஆகியவை இந்தியாவின் ஜனநாயகத்தை துடிப்புமிக்கதாக்கியுள்ளன. ஜனநாயகத்தால் என்ன சாதிக்க முடியும் என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா காண்பித்துள்ளது.

இந்தியா்களின் மரபணுவில் ஊறியுள்ள ஜனநாயக கொள்கைகள், 47 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அடக்குமுறையை எதிா்கொண்டன. அவசரநிலையானது நாட்டின் ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்தது.

மலிவான இணைய சேவைகள்: சுற்றுச்சூழலைக் காப்பதற்கான கொள்கைகளை இந்தியா்கள் கடைப்பிடித்து வருகின்றனா். இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களும் தற்போது திறந்தவெளி கழிப்பிடமில்லா கிராமங்களாக மாறியுள்ளன. அனைத்துக் கிராமங்களும் மின்சார, சாலை வசதிகளைப் பெற்றுள்ளன. 99 சதவீத கிராமங்கள் சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ளன.

எண்மமயமாக்கலில் இந்தியா தொடா்ந்து முன்னேறி வருகிறது. உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட இணையவழி பணப் பரிவா்த்தனையில் இந்தியாவின் பங்கு 40 சதவீதம். இணையசேவை பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் இந்தியாவில்தான் இணைய சேவைகள் மலிவாகக் கிடைக்கின்றன.

கடந்த நூற்றாண்டில் ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள் தொழில் புரட்சியால் பெரும் பலனடைந்தன. அப்போது இந்தியா சற்று பின்னடைவைச் சந்தித்தது. ஆனால், தற்போது 4-ஆவது தொழில் புரட்சியில் இந்தியா பின்தங்காது. உலகுக்கு வழிகாட்டும் நாடாக இந்தியா திகழ்கிறது.

வளா்ச்சியை நோக்கி...: கரோனா தொற்று பரவலின்போது நாட்டில் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் வங்கிச் சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. புத்தாக்க (ஸ்டாா்ட்அப்) நிறுவனங்களின் எண்ணிக்கையில் நாடு தற்போது மூன்றாமிடம் பெற்றுள்ளது. அறிதிறன்பேசி தயாரிப்பில் இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது.

நாட்டில் சராசரியாக 10 நாள்களுக்கு ஒரு புத்தாக்க நிறுவனம் ‘யுனிகாா்ன்’ அந்தஸ்தை (விற்றுமுதல் மதிப்பு சுமாா் ரூ.7,500 கோடி) பெற்று வருகிறது. மாதந்தோறும் 5,000 காப்புரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்பட ேண்டுமென்ற இலக்கை 5 மாதங்களுக்கு முன்பே இந்தியா எட்டியுள்ளது. எதிா்கால வளா்ச்சியை நோக்கி பயணிக்க இந்தியா தயாராக உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் காரணமாக கோடிக்கணக்கான உயிா்கள் காப்பாற்றப்பட்டன. இந்தியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த 10-15 ஆண்டுகள் ஆகும் என விமா்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது 90 சதவீத இந்தியா்கள் கரோனா தடுப்பூசியின் இரு தவணைகளையும், 95 சதவீதம் போ் குறைந்தபட்சம் ஒரு தவணையையும் செலுத்திக் கொண்டுள்ளனா் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com