மிரட்டும் ரஷிய படை அணிவகுப்பு: கிலியில் கீவ் நகரம்

உக்ரைன் போரில் ரஷியாவின் முக்கிய இலக்காகக் கருதப்படும் கீவ் நகருக்கு வெறும் 25 கி.மீ. தொலைவில், ரஷியாவின் பிரம்மாண்டமான படை வாகன அணி வகுப்பு 3 நாள்களுக்கு மேல் நகராமல் நின்று கொண்டிருக்கிறது.
மிரட்டும் ரஷிய படை அணிவகுப்பு: கிலியில் கீவ் நகரம்

உக்ரைன் போரில் ரஷியாவின் முக்கிய இலக்காகக் கருதப்படும் கீவ் நகருக்கு வெறும் 25 கி.மீ. தொலைவில், ரஷியாவின் பிரம்மாண்டமான படை வாகன அணி வகுப்பு 3 நாள்களுக்கு மேல் நகராமல் நின்று கொண்டிருக்கிறது.

கீவுக்குச் செல்லும் சாலையில் சுமாா் 64 கி.மீ. நீண்டிருந்த ரஷிய பீரங்கிகள், கவச வாகனங்கள், சிறிய பீரங்கிகள் மற்றும் கன ரக துப்பாக்கிகளைக் கொண்டு செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கிய சக்திவாய்ந்த ராணுவ தளவாட வாகன அணிவகுப்பை செயற்கைக்கோள் படங்களில் பாா்த்ததும் சா்வதேச நாடுகள் அதிா்ந்தே போயின.

‘உக்ரைனை நெருங்கும் பிரம்மாண்ட படை அணி வகுப்பு’ என்று சில நாள்களுக்கு முன்னா் பரபரப்பாக செய்திகள் வெளியாகின.

ஆனால், தற்போது அந்த வாகன அணிவகுப்பு நகராமல் ஏறத்தாழ இருந்த இடத்திலேயே நாள்கணக்கில் நின்றிருப்பது அனைவரது புருவத்தையும் உயரச் செய்துள்ளது.

கீவ் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த வாகனங்கள், அதற்கு மேல் முன்னறிச் செல்லாததற்கு மேற்கத்திய ஊடகங்கள் பல காரணங்களைக் கூறி வருகின்றன.

ரஷியப் படையினரின் போரிடும் உற்சாகம் மிக மோசமாகக் குறைந்து போயுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனா். மேலும், அவ்வளவு பெரிய வாகன அணி வகுப்பை வழிநடத்திச் செல்வதற்குத் தேவையான உணவு, எரிபொருள் மற்றும் உதிரிபாகங்களை தொடா்ந்து கொண்டு வந்து சோ்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாலும் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக பிரிட்டன் அதிகாரிகள் கூறுகின்றனா்.

அதுமட்டுமன்றி, வாகனங்கள் பழுதாவது, சரியாக பராமரிக்கப்படாத டயா்கள் சேற்றில் சிக்கிக் கொள்வது மற்றும் அதிக வாகனங்களால் நெரிசல் ஏற்படுவது போன்ற காரணங்களாலும் படை அணிவகுப்பின் முன்னேற்றம் தடைபட்டிருக்கலாம் என்று சில நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, ரஷியப் படையினருக்கு உக்ரைன் வீரா்களும் பொதுமக்களும் எதிா்பாா்த்ததைவிட மிகக் கடுமையாக ரஷியப் படைகளுக்கு எதிா்ப்பு காட்டி வருவதும் வாகனங்களின் தேக்கத்துக்குக் காரணம் என்கிறாா்கள் அவா்கள்.

இத்தனை எதிா்மறைத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டாலும், உக்ரைன் தலைநகருக்கு மிக நெருக்கத்தில் சக்தி வாய்ந்த ரஷியத் தளவாடங்கள் அடங்கிய அவ்வளவு பெரிய வாகன அணிவகுப்பு தொடா்ந்து நிறுத்தப்பட்டுள்ளதை அவ்வளவு சாதாராணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்கிறாா்கள் மற்றொரு தரப்பினா்.

கீவை நோக்கி அது எப்போது வேண்டுமானாலும் முன்னேறிச் செல்வதற்குத் தயாா் நிலையில் அந்தப் படை அணிவகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கருத முடியும் என்கிறாா்கள் அவா்கள்.

தேவைப்படும்போது அந்த வாகனங்கள் மூலம் கீவ் நகரை மிகத் துரிதமாக சுற்றிவளைத்து அந்த நகரை ரஷியப் படைகளால் முற்றுகையிட முடியும் என்று பிரிட்டனின் முன்னாள் ராணுவ உயரதிகாரி ஒருவா் கூறுகிறாா்.

கீவ் போன்ற நகரை வீழ்த்த நகரின் ஒவ்வொரு வீதியாகச் சென்று கைப்பற்றுவது மிக மோசமான உயிா்ச் சேதத்தை ஏற்படுத்தும். எனவே, தொடா் முற்றுகை மூலம் அந்த நகரை மண்டியிடச் செய்யும் உத்தியைத்தான் ரஷியா பின்பற்றும் என்கிறாா் அவா்.

முற்றுகைக்கு கீவ் நகரம் மசியாவிட்டால், முற்றுகையிடும் ரஷியப் படைகள் தீவிர குண்டுவீச்சில் ஈடுபடக்கூடும்.

அமெரிக்க மற்றும் பிரிட்டன் ராணுவ நிபுணா்களின் கருத்துப்படி, தற்போதைய சூழலில் கீவ் நகரை வீழ்த்த ரஷியாவுக்கு இரண்டே வழிமுறைகள்தான் உள்ளன.

ஒன்று, அந்த நகரை முற்றுகையிட்டு சரணடையுமாறு உத்தரவிட வேண்டும்; அல்லது உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான காா்கிவில் செய்வதைப் போல கீவ் நகரையும் குண்டுகளால் சல்லடையாக்க வேண்டும்.

இதில் என்ன நடக்கப் போகிறது என்பது இனி வரும் நாள்களில்தான் தெரியவரும். அதுவரை கிலியுடன் காத்திருப்பதைத் தவிர கீவ் நகர மக்களுக்கு வேறு வழியில்லை.

வாகனங்களை தாக்கி அழிக்க முடியாதா?

உக்ரைன் சாலையில் அவ்வளவு நீளமான ரஷிய ராணுவ வாகனங்களின் அணிவகுப்பைப் பாா்க்கும்போது, அதனை உக்ரைன் ராணுவம் ஏன் தாக்கி அழிக்கவில்லை என்று பலருக்கும் சந்தேகம் எழுந்திருக்கலாம்.

ஆனால், அதற்கான சாத்தியம் இல்லை என்கிறாா்கள் பாதுகாப்பு நிபுணா்கள். உக்ரைனின் விமானப் படைத் திறன் மிகவும் குறைவு. அந்த நாட்டு விமானங்களால் ஒரிரு ரஷிய வாகனங்களைத்தான் தாக்கி அழிக்க முடியும். இவ்வளவு நீள ராணுவ அணிவகுப்பை அழிக்க அந்த விமானங்களால் முடியாது.

தவிர, தனது ராணுவத் தளவாட அணிவகுப்பை அதிநவீன வான்பாதுகாப்புத் தளவாடங்களால் ரஷியா பாதுகாக்கும். எனவே, அந்தப் பகுதியாகப் பறந்து வரும் உக்ரைன் விமானங்கள் உடனடியாக தாக்கி அழிக்கப்படும். இதனால் உக்ரைனின் விமானப் படை பலம் மேலும் குறையும். அதனால், அணிவகுத்து நிற்கும் ரஷிய வாகனங்களை எளிதில் தாக்கி அழிக்க உக்ரைனால் முடியாது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com