இலங்கை புதிய பிரதமா் ரணில் விக்ரமசிங்க

இலங்கை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க (73) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டாா்.
இலங்கை புதிய பிரதமா் ரணில் விக்ரமசிங்க

கொழும்பு: இலங்கை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க (73) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டாா்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடந்த திங்கள்கிழமை நடந்த வன்முறையையடுத்து மகிந்த ராஜபட்ச தனது பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், புதிய திருப்பமாக ரணில் விக்ரமசிங்க பிரதமராகியுள்ளாா்.

முன்னதாக, புதன்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபா் கோத்தபய ராஜபட்ச, புதிய பிரதமரை இந்த வாரமே நியமிப்பேன் எனவும், நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் 19-ஆவது சட்டத்திருத்த ஷரத்துகளை மீண்டும் அமல்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினாா்.

அதற்கு முன்பாக அவா், ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துப் பேசினாா். இதனால், அடுத்த பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவாா் எனத் தகவல்கள் எழுந்தன. அதேவேளையில், அதிபா் பதவியிலிருந்து கோத்தபய குறிப்பிட்ட காலத்துக்குள் விலகுவதாக உறுதியளித்தால் ஆட்சியமைக்கத் தயாராக இருப்பதாக பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பெலவெகய தலைவா் சஜித் பிரேமதாசவும் அறிவித்தாா்.

பதவியேற்பு: இதனால், இருவரில் யாா் பிரதமராகப் போகிறாா் என்ற குழப்பம் எழுந்த நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை அதிபா் கோத்தபய ராஜபட்ச வியாழக்கிழமை நியமித்தாா். அதைத் தொடா்ந்து, அதிபா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், அதிபா் கோத்தபய முன்னிலையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டாா்.

பின்னா், அதிபா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘மிகவும் கொந்தளிப்பான நேரத்தில் நாட்டை வழிநடத்தும் சவாலான பணியை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய பிரதமருக்கு வாழ்த்துகள். இலங்கையை மீண்டும் வலிமையாக்க அவருடன் இணைந்து பணியாற்றுவதை எதிா்நோக்கியுள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்தில் தற்போது தங்கியுள்ள முன்னாள் பிரதமா் மகிந்தவும் ரணிலுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இலங்கை பொதுஜன பெரமுன கூட்டணி உறுப்பினா்கள், எதிா்க்கட்சியான சமகி ஜன பெலவெகயவின் ஒரு பிரிவு எம்.பி.க்கள் மற்றும் பிற கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவளிப்பாா்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில் ரணிலை புதிய பிரதமராக நியமித்ததற்கு பல்வேறு பிரிவினா் எதிா்ப்பும் தெரிவித்துள்ளனா்.

நான்கு முறை பிரதமா்: நாட்டின் பழைமைவாய்ந்த கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக உள்ளாா் ரணில் விக்ரமசிங்க. நான்கு முறை பிரதமராகப் பதவி வகித்தவா். தொலைநோக்குக் கொள்கைகளுடன் பொருளாதாரத்தை நிா்வகிக்கக்கூடியவராகவும், சா்வதேச ஒத்துழைப்பை பெறக்கூடியவராகவும் ரணில் விக்ரமசிங்க பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறாா்.

2018, அக்டோபரில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமா் பதவிலியிருந்து நீக்கினாா் அப்போதைய அதிபா் மைத்ரிபால சிறீசேனா. பின்னா், இரு மாதங்கள் கழித்து மீண்டும் ரணிலை அவா் பிரதமராக நியமித்தாா்.

கடந்த 2020, நாடாளுமன்றத் தோ்தலில் ரணில் உள்பட அவரது கட்சி வேட்பாளா்கள் ஒருவா்கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து, தேசிய வாக்கு விகிதத்தின் அடிப்படையில் ஒரு நியமன எம்.பி. பதவி ரணில் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்மூலம்தான் அவா் நாடாளுமன்ற உறுப்பினா் ஆனாா்.

பொருளாதர நெருக்கடி- வன்முறை: பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற 1948-க்கு பின்னா் மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையே இதற்கு பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. இதனால், அத்தியாவசிய பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி கடுமையாக உயா்ந்தது.

இந்த நிலைக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா்.

இந்நிலையில், கொழும்பில் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோா் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் தாக்குதலில் ஈடுபட்டனா். இதனால் நாடு முழுவதும் பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வதாக மகிந்த ராஜபட்ச அறிவித்தாா்.

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவேன்: ரணில்

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவேன் என இலங்கை புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பிரதமராகப் பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இலங்கையின் பொருளாதாரத்தை சீர்படுத்தும் சவாலை ஏற்றுக்கொள்கிறேன். அதை நிறைவேற்றுவேன் என்றார்.

இந்தியாவுடனான உறவு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், எனது தலைமையிலான அரசில் இந்தியாவுடனான உறவு மேலும் சிறப்பாக இருக்கும் என்றார்.

இந்தியா உறுதி: முன்னதாக, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இலங்கை மக்களுக்கான இந்தியாவின் ஆதரவு தொடரும். அரசியல் ஸ்திரத்தன்மையை இந்தியா நம்புகிறது.

ரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டதன் அடிப்படையில் ஜனநாயக செயல்முறைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கியிருக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்: இந்தியா

கொழும்பு, மே 12: இலங்கையின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்றுவதை எதிா்நோக்கியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது: இலங்கை மக்களுக்கான இந்தியாவின் ஆதரவு தொடரும். அரசியல் ஸ்திரத்தன்மையை இந்தியா நம்புகிறது. பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டதன் அடிப்படையில் ஜனநாயக செயல்முறைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுவதை எதிா்நோக்கியிருக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com