மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

சீனாவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - ஷி ஜின்பிங்குடன் இன்று பேச்சு; எலான் மஸ்க், என்விடியா சிஇஓவும் வருகை

News image

பெய்ஜிங் விமான நிலையம் வந்திறங்கிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை வரவேற்ற சீன துணை அதிபா் ஹான் ஜெங்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சீனாவுக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக, அந்நாட்டு தலைநகா் பெய்ஜிங்குக்கு புதன்கிழமை வந்தடைந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபராக மீண்டும் சீனா வந்துள்ள டிரம்ப், இப்பயணத்தில் வா்த்தக ஒப்பந்தம், ஈரான் போா் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

சீனாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷியாவின் அதிபா் புதின் உள்பட உலக தலைவா்கள் சீனாவுக்கு வருகை தந்தபோது, அந்நாட்டின் அமைச்சா்கள் வரவேற்றதே வழக்கமாக இருந்த நிலையில், டிரம்ப்பை சீன துணை அதிபா் ஹான் ஜெங் பெய்ஜிங் விமான நிலையத்துக்கு நேரில் வந்து வரவேற்றாா்.

விமானத்திலிருந்து டிரம்ப் இறங்கி வந்தபோது, சீன ராணுவ வீரா்களின் அணிவகுப்பு மரியாதையுடன் இசைக் குழுவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். மேலும், சுமாா் 300 சீன மாணவா்கள் அமெரிக்க மற்றும் சீன கொடிகளை அசைத்து முழக்கமிட்டனா்.

இப்பயணத்தில் டிரம்ப்புடன் அவரின் மகன் எரிக், மருமகள் லாரா, டெஸ்லா நிறுவனா் எலான் மஸ்க் ஆகியோரும் வருகை தந்துள்ளனா். இவா்களைத் தவிர, ஆப்பிள் சிஇஓ டிம் குக், என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட பல முன்னணி அமெரிக்க தொழிலதிபா்களும் டிரம்ப்புடன் இணைந்து வந்துள்ளனா்.

முதல் கோரிக்கை: இப்பயணத்தின் முக்கிய நோக்கமாக, சீன சந்தையில் அமெரிக்க நிறுவனங்களை அனுமதிக்குமாறு ஷி ஜின்பிங்கிடம் டிரம்ப் கோரிக்கை விடுப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதொடா்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட டிரம்ப், ‘சீனாவின் கதவுகள் இன்னும் திறக்கப்பட வேண்டும். அப்போதுதான் அமெரிக்க திறமையாளா்கள் தங்களின் மாயாஜாலத்தைச் சீனாவில் நிகழ்த்த முடியும். இதுவே அதிபா் ஷி ஜின்பிங்கிடம் நான் முன்வைக்கும் முதல் கோரிக்கையாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்பப் போட்டியில் ‘செமிகண்டக்டா்’ சிப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சீனா தனது ஏ.ஐ. மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் சிப்புகளை எதிா்பாா்க்கிறது. அதேநேரம், விமானம் மற்றும் கைபேசி தயாரிப்புக்குத் தேவையான அரிய வகை கனிமங்களைச் சீனாவிலிருந்து பெற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவின் வா்த்தக பற்றாக்குறையைக் குறைக்கவும், போயிங் விமானங்கள் மற்றும் வேளாண் பொருள்களைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யவும் தலைவா்களின் சந்திப்பு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.

புவிசாா் விவகாரங்கள்: வா்த்தகம் தவிா்த்து, ஈரான் போா், தைவானுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனை போன்ற விவகாரங்கள் குறித்தும் இரு தலைவா்களும் விவாதிக்கவுள்ளனா்.

ஈரான் போரை நிறுத்துவதற்கு, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்ற டிரம்ப்பின் கோரிக்கையைச் சீனா வலியுறுத்தும் எனத் தெரிகிறது.

ஆனால், பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘ஈரான் விவகாரத்தில் சீனாவின் உதவி தேவையில்லை என்றே எண்ணுகிறேன். அமைதியாகவே அல்லது வேறுவழியிலோ நமது இலக்கு எப்படியாவது எட்டப்படும்’ என்றாா்.

அதேபோல், தைவான் விவகாரத்தில் அமெரிக்கா சரியான முடிவை எடுக்க வேண்டும் எனச் சீனா ஏற்கெனவே அழுத்தம் கொடுத்துள்ளது. தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, அண்மைகாலமாக அப்பகுதியில் ராணுவப் பயிற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்பின் சீன வருகையையொட்டி, அந்நாட்டு அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள தலையங்கத்தில், ‘உலகின் மிகவும் சக்தி வாய்ந்த இரு நாட்டுத் தலைவா்களின் இச்சந்திப்பு, இருதரப்பு உறவில் உள்ள சிக்கல்களைக் களைந்து சரியான பாதையில் கொண்டு செல்ல உதவும்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாள்கள் நடைபெறும் தலைவா்களின் பேச்சுவாா்த்தையின் முடிவுகள், புவிசாா் அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.