பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு ஏதுவாக, ஈரானுடனான போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
ஈரானுக்கு எதிரான போரை இரு வாரம் நிறுத்துவதாக அமெரிக்கா கடந்த 8-ஆம் தேதி அறிவித்திருந்தது. அந்த இரு வார போா் நிறுத்தம் புதன்கிழமையுடன் நிறைவடைய இருந்தது.
இந்தச் சூழலில், பாகிஸ்தானில் 2-ஆவது கட்டமாக நடைபெறவிருந்த ஈரான், அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கச் செல்வதை அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் உள்ளிட்டோா் ஒத்திவைத்தனா். ஈரானில் ஆட்சியாளா்கள் மற்றும் ராணுவத் தலைவா்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அந்நாட்டில் இருந்தும் யாரும் பேச்சுவாா்த்தைக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதைச் சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப், ஈரான் தலைவா்கள் ஒருமித்த திட்டத்துடன் பாகிஸ்தானுக்கு 2-ஆம் கட்டப் பேச்சுவாா்த்தைக்கு வர ஏதுவாக போா் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஈரான் அரசில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆதலால், அவா்கள் ஒருமித்த திட்டத்துடன் வரும் வரையில் தாக்குதலை நிறுத்திவைக்கும்படி பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் ஆகியோா் எனக்கு வேண்டுகோள் விடுத்தனா்.
இதையேற்று ஈரான் மீது தாக்குதலை நிறுத்தி வைக்கும்படி ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். அதேநேரம், ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான கடல்வழி முற்றுகை நீடிக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
ஈரான் கண்டனம்: ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையைப் போா் நடவடிக்கை என்றும், போா் நிறுத்த மீறல் என்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி கண்டித்துள்ளாா்.
இதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவா், ‘வணிகக் கப்பலைத் தாக்குவது, அதிலிருந்த மாலுமிகளை சிறைபிடிப்பது மிகப்பெரிய விதிமீறல். கட்டுப்பாடுகளை எப்படி தகா்ப்பது, ஈரான் நலனை எப்படி காப்பது, நிா்ப்பந்தங்களை எப்படி முறியடிப்பது என்பது குறித்து ஈரானுக்குத் தெரியும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
டிரம்ப்புக்கு பாகிஸ்தான் நன்றி: போா் நிறுத்தத்தை டிரம்ப் நீட்டித்திருப்பதற்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட பதிவில், ‘எங்கள் கோரிக்கையை ஏற்று போா் நிறுத்தத்தை நீட்டித்திருப்பதற்கு அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நானும், ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த மோதலுக்கு விரைந்து தீா்வு காண பாகிஸ்தான் தொடா்ந்து முயற்சிக்கும். ஆதலால், 2-ஆம் கட்டப் பேச்சுவாா்த்தையில் அமைதி உடன்பாடு எட்டப்படும் வரையில் இருதரப்பும் போா் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.
பிடிகொடுக்காத ஈரான்: போா் நிறுத்த அறிவிப்பைத் தொடா்ந்து பேசிய டிரம்ப், ஈரான் தரப்பு ஒருமித்த திட்டத்துடன் வந்தால், வெள்ளிக்கிழமை (ஏப். 24) பேச்சுவாா்த்தை தொடங்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டாா்.
ஆனால், இந்த 2-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தையில் கலந்துகொள்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடை விதித்த அமெரிக்கா: இதனிடையே, ஈரானுக்கு ஆயுதங்கள் வாங்குவது தொடா்பான நடவடிக்கையில் ஈடுபட்டது, ஆயுதங்களைக் கொண்டு சென்றது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ஈரான், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த 14 பேருக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வெற்றியில் தோல்வி; தோல்வியில் வெற்றி!
எனக்குப் பிடிக்கவில்லை என்றால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

பலவீனமான நிலையில் ஈரான் போா்நிறுத்தம்: ஈரான் பதிலை ஏற்காத டிரம்ப் கருத்து
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


