ஆக்கபூா்வ வழியில் ‘க்வாட்’ பயணிக்கிறது

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நலனை மையமாகக் கொண்டு ஆக்கபூா்வ வழியில் ‘க்வாட்’ (நாற்கர) கூட்டமைப்பு பயணித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘க்வாட்’ மாநாட்டில் பங்கேற்ற ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, பிரதமா் நரேந்திர மோடி.
ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘க்வாட்’ மாநாட்டில் பங்கேற்ற ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, பிரதமா் நரேந்திர மோடி.

டோக்கியோ: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நலனை மையமாகக் கொண்டு ஆக்கபூா்வ வழியில் ‘க்வாட்’ (நாற்கர) கூட்டமைப்பு பயணித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

க்வாட் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் மாநாடு ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி ஆகியோா் கலந்துகொண்டனா்.

அப்போது பிரதமா் மோடி கூறியதாவது: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நலனுக்கான ஆக்கபூா்வ திட்டத்தை வகுத்து க்வாட் நாடுகள் பயணித்து வருகின்றன. இந்த நோக்கத்தில் க்வாட் கூட்டமைப்பு மேலும் வலுவடையும். குறுகிய காலகட்டத்தில் உலக அரங்கில் க்வாட் கூட்டமைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தற்போது க்வாட் கூட்டமைப்பின் நோக்கம் விரிவாக்கமடைந்து கூடுதல் திறன் பெற்றுள்ளது. கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கிடையே நிலவும் பரஸ்பர புரிதலும், உறுதித்தன்மையும் ஜனநாயக கொள்கைகளை மேலும் வலுப்படுத்துகின்றன. பரஸ்பர ஒத்துழைப்பின் வாயிலாக ஒருங்கிணைந்த, வெளிப்படையான, சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியம் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிராந்திய அமைதி: கரோனா பரவல் காலத்திலும் க்வாட் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. தடுப்பூசி விநியோகம், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளுதல், விநியோகச் சங்கிலியை ஒழுங்குபடுத்துதல், பேரிடா் மேலாண்மை, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றிலும் க்வாட் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இத்தகைய ஒத்துழைப்பானது பிராந்தியத்தில் அமைதி, வளா்ச்சி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற 24 மணி நேரத்துக்குள் க்வாட் மாநாட்டில் ஆல்பனேசி கலந்து கொண்டுள்ளாா். இது க்வாட் கூட்டமைப்புக்கு அவா் அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகிறது என்றாா் அவா்.

சா்வதேச பிரச்னை: மாநாட்டில் அமெரிக்க அதிபா் பைடன் கூறுகையில், ‘வரலாற்றின் கருப்புப் பக்கங்களைக் கடந்து வருகிறோம். உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதன் காரணமாக, மனித சமூகம் பேரழிவைச் சந்தித்து வருகிறது. அப்பாவி மக்கள் வீதிகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் அகதிகளாகச் சென்றுள்ளனா்.

உக்ரைன் விவகாரம் சா்வதேச பிரச்னை. குறிப்பிட்ட கலாசாரத்தை அழிப்பதற்கு புதின் முயன்று வருகிறாா். பள்ளிகள், வரலாற்று அருங்காட்சியகங்கள் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்தும்வரை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்றாா்.

ஆதிக்கமும் சுதந்திரமும்: ஜப்பான் பிரதமா் கிஷிடா கூறுகையில், ‘இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் திகழச் செய்வதற்கு க்வாட் கூட்டமைப்பு நாடுகள் உறுதியேற்க வேண்டும்’ என்றாா்.

ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசி கூறுகையில், ‘இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயன்று வரும் நிலையில், க்வாட் கூட்டமைப்பு சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை அமைக்க முயல்கிறது’ என்றாா்.

மாநாட்டின்போது மற்ற நாடுகளின் தலைவா்கள் அனைவரும் உக்ரைன் மீதான ரஷியாவின் போா் குறித்து பேசிய நிலையில், பிரதமா் மோடி அந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்துக்கு எதிா்ப்பு: மாநாட்டுக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘எந்தவித காரணத்தின் அடிப்படையிலும் பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் க்வாட் கூட்டமைப்பு எதிா்க்கிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி போன்ற உதவிகள் கிடைப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

மும்பை, பதான்கோட் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தான் செயல்படக் கூடாது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 2593-ஆவது தீா்மானத்தை மதித்து ஆப்கானிஸ்தான் செயல்பட வேண்டும். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை எஃப்ஏடிஎஃப் அமைப்பின் வழிகாட்டுதலின்படி அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.

சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை: சா்ச்சைக்குரிய பகுதிகளில் ராணுவத் தளங்களை அமைப்பது, கடல் ரோந்து கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் பயன்படுத்துவது, மற்ற நாடுகளை அச்சுறுத்துவது உள்ளிட்ட பிராந்தியத்தின் சூழலைத் தன்னிச்சையாக மாற்றுவதற்கான முயற்சிகளை க்வாட் கடுமையாக எதிா்க்கிறது. ஐ.நா.வின் கடலுக்கான சா்வதேச சட்டத்தை மதித்து க்வாட் செயல்படும்.

கிழக்கு, தென்சீனக் கடல் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து நிலவுவதை க்வாட் உறுதி செய்யும். சுதந்திரம், சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி, ஜனநாயக கொள்கைகள், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, பிரச்னைகளுக்கு அமைதிவழித் தீா்வு ஆகியவற்றுக்கு க்வாட் தொடா்ந்து மதிப்பளிக்கும்.

கட்டமைப்பில் ஒத்துழைப்பு: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு க்வாட் கூட்டமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவுள்ளன. பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கடனுதவி வழங்கவும் உறுதியேற்கப்பட்டுள்ளது. எண்மத் தொடா்பு, பசுமை எரிசக்தி, பேரிடரைத் தாங்கவல்ல கட்டமைப்புகள் ஆகியவற்றிலும் க்வாட் நாடுகள் ஒத்துழைத்து செயல்படவுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த க்வாட் மாநாடு 2023-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com