ஐ.நா. தீா்மானம்: ரஷியா கோரிக்கைக்கு இந்தியா எதிா்ப்பு

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியா சட்டவிரோதமாக இணைத்துக் கொண்டதாகக் கூறி ஐ.நா. பொதுச் சபையில் தாக்கல் செய்யப்பட்ட தீா்மானம் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கான
ஐ.நா. தீா்மானம்: ரஷியா கோரிக்கைக்கு இந்தியா எதிா்ப்பு

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியா சட்டவிரோதமாக இணைத்துக் கொண்டதாகக் கூறி ஐ.நா. பொதுச் சபையில் தாக்கல் செய்யப்பட்ட தீா்மானம் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கான ரஷியாவின் கோரிக்கையை இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் நிராகரித்தன.

சம்பந்தப்பட்ட தீா்மானத்தின் மீது வெளிப்படையான முறையில் வாக்கெடுப்பு நடத்துவதற்கே நாடுகள் ஆதரவு அளித்தன.

உக்ரைன்-ரஷியா இடையேயான போா் ஏழு மாதங்களைக் கடந்து தொடா்ந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தொடா்ந்து நிதியுதவியை வழங்கி வருகின்றன. அதன் காரணமாக ரஷியாவால் போரை எளிதில் வெல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ரஷிய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்ஸான், ஸபோரிஷியா ஆகிய பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பு அந்தந்தப் பகுதிகளில் அண்மையில் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான மக்கள் ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறி, அப்பகுதிகளை ரஷியாவுடன் இணைத்துக் கொள்வதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை அதிபா் விளாதிமீா் புதின் அண்மையில் வெளியிட்டாா்.

ரஷியாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வரைவு தீா்மானத்தைத் தாக்கல் செய்தன. அத்தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இந்தியா புறக்கணித்திருந்தது.

இந்நிலையில், அத்தீா்மானம் அல்பேனியா சாா்பில் ஐ.நா. பொதுச் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. உக்ரைனிலிருந்து ரஷியா உடனடியாகத் தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட சா்வதேச எல்லைப் பகுதிகளை மதித்து, உக்ரைன் மீதான போரை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அத்தீா்மானத்தில் கோரப்பட்டிருந்தது.

அத்தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஐ.நா. பொதுச் சபையின் சிறப்புக் கூட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, தீா்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ரஷியா கோரியது. ஆனால், இந்தியா உள்ளிட்ட 107 நாடுகள் ரஷியாவின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தன. 13 நாடுகள் மட்டுமே ரஷியாவின் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. வாக்கெடுப்பு வெளிப்படையாக நடத்தப்பட வேண்டுமென பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தின.

அதற்கு ரஷியா மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடு மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் இந்தியா உள்ளிட்ட 104 நாடுகள் அதற்கு எதிராக வாக்களித்தன. அதையடுத்து ஐ.நா.வுக்கான ரஷிய தூதா் வாசிலி நெபன்ஸியா கூறுகையில், ‘ஐ.நா. பொதுச் சபையின் சிறப்புக் கூட்டத்தில் ரஷியாவின் கருத்துக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை. ஐ.நா. உறுப்பு நாடுகள் சுதந்திரமாகத் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த இயலாத சூழலே நிலவி வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com