

பெகன்பாரு: மேற்கு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 11 பேர் நீரில் மூழ்கி பலியானதாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கிழக்கு கடற்கரை பகுதியின் டெம்பிலாஹான் துறைமுகத்தில் இருந்து 198 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அண்டை நாடான சிங்கப்பூருக்கு அருகில் உள்ள ரியாவ் தீவுகளில் உள்ள தஞ்சுங் பினாங் தீவுக்கு 74 பேர் பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்த படகு புறப்பட்ட 30 நிமிடங்களுக்கு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், நீரில் மூழ்கி 11 பேர் பலியானதாகவும், 62 பேரை மீட்புப் படையினர் மீட்டுள்ளதாகவும், ஒருவரை மட்டும் காணவில்லை என்றும் நீரில் மூழ்கி இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகில் பயணம் செய்தவர்களின் சரியான எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படாததால், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சுமார் 17 ஆயிரம் தீவுகளைக் கொண்ட தென்கிழக்கு ஆசியத் தீவுக்கூட்டமான இந்தோனேசியாவில், பாதுகாப்புத் தரமின்மை காரணமாக கடல் விபத்துக்கள் நிகழ்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.
2018 இல், சுமத்ரா தீவில் உள்ள உலகின் மிக ஆழமான ஏரிகளில் ஒரு படகு கவிழந்ததில் 150-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.