காஸா மீதான தாக்குதலில் செய்யறிவைப் பயன்படுத்தும் இஸ்ரேல்! முதல் முறை!!

போரில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது உலகில் இதுவே முதல்முறை.
இஸ்ரேல் ராணுவம் | AP
இஸ்ரேல் ராணுவம் | AP


போர் நிறுத்தத்துக்குப் பிறகு இஸ்ரேல் தொடங்கியிருக்கும் காஸாவின் மீதான தாக்குதலில் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பயன்படுத்தி வருவது பதட்டத்தை அதிகரித்துள்ளது.

கோஸ்பெல் (நற்செய்தி) எனப் பெயரிடப்பட்டுள்ள இஸ்ரேலின் செய்யறிவு அமைப்பு தாக்க வேண்டிய இலக்குகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

கோஸ்பெல், முதன்முதலில் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 11 நாள் போரில் பயன்படுத்தப்பட்டது. இயந்திர வழி கற்றல் மற்றும் மேம்பட்ட கணினி தொழில்நுட்பத்தின் மூலம் ராணுவத்துக்கான இலக்குகளை உருவாக்கிக் கொடுக்கும் திறன் கொண்டது, இந்தத் தளம்.

போர் நிறுத்தத்துக்குப் பிறகு முழுவீச்சில் தொடங்கியிருக்கும் தாக்குதல், இஸ்ரேலுக்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த களமளித்து கொடுத்துள்ளது.

ரகசியமான ஏஐ வசதி அமைந்த ராணுவ உளவுப் பிரிவு, அக்.7 தொடங்கிய ஹமாஸ் உடனான் போரில் முக்கிய பங்காற்றுவதாக கார்டியன் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

2019-ல் அமைக்கப்பட்ட உளவுப் பிரிவின் இணையத்தளம், ஹப்சோரா எனப் பெயரிடப்பட்ட (ஆங்கிலத்தில் கோஸ்பெல்) ஏஐ தளம், ஹமாஸுக்கு எதிரான போரில் இலக்குகளை விரைவாக உருவாக்கப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் காஸா | AP
இஸ்ரேல் தாக்குதலில் காஸா | AP

இலக்குகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

உள்ளீடுகளின் அடிப்படையில் மிக விரைவாகவும் தானியங்கி முறையிலும் இலக்குகளை கோஸ்பெல் உருவாக்குகிறது.

இவை உளவுப் பிரிவின் கணினி தருகிற பரிந்துரைகள் மற்றும் அதிகாரிகளின் கண்டறிதல் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. 

ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாதிகள் என அறியப்பட்டவர்களின் செயல்பாட்டு தளங்கள், அவர்களால் பயன்படுத்தப்படும் தனி வீடுகள் ஆகியவற்றை ஏஐ அமைப்பு கண்டறிந்து தருகிறது.

மேலும், கோஸ்பெல் அமைப்பு, பயங்கரவாதிகள் என சந்தேகத்துக்குரிய 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேரின் பட்டியலை உருவாக்க உதவியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவிக்கிறது.

காஸாவில் சிதைந்த கட்டிடங்கள் | AP
காஸாவில் சிதைந்த கட்டிடங்கள் | AP

செய்யறிவின் திறன்

”எந்த மனிதராலும் முடியாதளவுக்கு மிகப்பெரிய அளவிலான தகவல்களை ஏஐ-யால் உருவாக்கவும் அதன் அடிப்படையில் இலக்குகளை நிர்ணயிக்கவும் முடிகிறது” என முன்னாள் பாதுகாப்பு அதிகாரி அவிவ் கோசவி கார்டியன் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், 2021 போரில் அதற்கு முன்வரை ஆண்டுக்கு 50 இலக்குகள் என நிர்ணயித்த இலக்குகளின் அளவை ஏஐ பயன்பாடு, நாளொன்றுக்கு 100 இலக்குகள் என்கிற அளவுக்கு அதிகரித்ததைக் குறிப்பிடுகிறார் அவிவ்.

மற்றொரு புறம் இதன் பாதகங்கள் குறித்தும் கவலையுறுகின்றனர், மனிதநேய ஆர்வலர்கள். போர்களில் மிகப்பெரிய அளவில் இத்தகைய தானியங்கி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவது மக்களின் பேரழிவுக்கு வழிவகுக்கும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com