உக்ரைனுக்கு ஜோ பைடன் திடீர் பயணம் ஏன்? - வெள்ளை மாளிகை விளக்கம்!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா நிச்சயம் தோல்வியடையும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 
உக்ரைனுக்கு ஜோ பைடன் திடீர் பயணம் ஏன்? - வெள்ளை மாளிகை விளக்கம்!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா நிச்சயம் தோல்வியடையும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் மீது தொடுத்த போர் ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இதையொட்டி ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். ஜோ பைடனும் ஸெலென்ஸ்கியும் நடந்து செல்லும் விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

இந்நிலையில் உக்ரைன் சென்றதை ஜோ பைடனும் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உக்ரைன் மீதான ரஷியாவின் மிருகத்தனமான படையெடுப்பின் ஓராண்டு நிறைவை நாம் நெருங்கி வரும் நிலையில், அதிபர் ஸெலென்ஸ்கியைச் சந்தித்து உக்ரைனின் ஜனநாயகம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காப்பாற்ற மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக நான் இன்று தலைநகர் கீவில் இருக்கிறேன். 

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு ரஷிய அதிபர் புதின் தனது படையெடுப்பைத் தொடங்கியபோது, ​​உக்ரைன் பலவீனமாக இருப்பதாகவும் மேற்கு நாடு பிளவுபட்டதாகவும் நினைத்தார். அவர் எங்களை மிஞ்சலாம் என்று நினைத்தார். ஆனால், அது தவறு. 

இந்த போரில் ரஷியா கண்டிப்பாக தோல்வியடையும். புதின் மற்றும் அவரது பரிவாரங்கள் சோதிக்கப்படும். உக்ரைனுக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் கிடைக்கும். இதில் எந்த சமரசமும் இல்லை. 

உக்ரைனுக்கு தொடர்ந்து உதவுவதற்காக ஆலோசிக்கும்பொருட்டு இன்று கீவில் இருக்கிறேன். உக்ரைனுக்கு அடுத்த ராணுவ, நிதியுதவி குறித்து இந்த வாரத்தில் அறிவிக்க இருக்கிறேன். 

உக்ரைனுக்கு ராணுவ, பொருளாதார,  மனிதாபிமான ஆதரவுக்கு அட்லாண்டிக் முதல் பசிபிக் வரையிலான நாடுகளின் கூட்டணியை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. அந்த ஆதரவு நிலைத்திருக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஸெலென்ஸ்கியுடனான சந்திப்பின்போது, உக்ரைனுக்கு மேலும் 500 பில்லியன் டாலர் வழங்கப்படும் என ஜோ பைடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com