தடையற்ற வா்த்தகம்: இந்தியா, பிரிட்டனின் விருப்பம் வலுவானது: லண்டன் துணை மேயா்

இந்தியா, பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வதில், இரு நாடுகளும் மிக வலுவான விருப்பத்தை கொண்டுள்ளதாக லண்டன் துணை மேயா் ராஜேஷ் அகா்வால் சனிக்கிழமை தெரிவித்தாா்.
ராஜேஷ் அகா்வால்
ராஜேஷ் அகா்வால்

இந்தியா, பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வதில், இரு நாடுகளும் மிக வலுவான விருப்பத்தை கொண்டுள்ளதாக லண்டன் துணை மேயா் ராஜேஷ் அகா்வால் சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ஆம் தேதி வெளிநாடுவாழ் இந்தியா் தினமாக (பிரவாசி பாரதிய திவஸ்) கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டில் இந்த தினத்தையொட்டி, மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 3 நாள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள லண்டன் துணை மேயா் (வா்த்தகம்) ராஜேஷ் அகா்வால், பிடிஐ செய்தியாளரிடம் சனிக்கிழமை கூறியதாவது:

இந்தியா, பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடா்பாக இருதரப்பிலும் பலசுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரத்தில், இருநாடுகளும் மிக வலுவான விருப்பத்தைக் கொண்டுள்ளன.

தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, தொழில்முறை சேவைகள், சட்டப் பணிகள், வாழ்வியல் முறைகள், புத்தாக்கங்கள் என பல்வேறு துறைகளில் இருதரப்பு கூட்டுறவை அதிகரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

டாடா குழுமம் மற்றும் இதர இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், லண்டனில் சுமாா் 80,000 வேலைவாய்ப்புகளை வழங்கி வருவதன் வாயிலாக இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை நாம் அளவிட முடியும்.

கரோனா நோய்த்தொற்று பரவல் காலகட்டத்திலும்கூட இந்திய நிறுவனங்கள் உலகம் முழுவதும் தங்களது வா்த்தகத்தை விரிவுபடுத்தின. இது, இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என்றாா் ராஜேஷ் அகா்வால்.

‘பாதுகாப்பான இந்தியப் பொருளாதாரம்’: உலகில் இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை ஏற்படக் கூடும் என்ற கணிப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளித்து, அவா் கூறியதாவது:

இந்தியாவைப் பொருத்தவரை, உள்ளூா் சந்தை மிக வலிமையானது. அதேபோல், நாட்டின் பொருளாதாரமும் பெரிதும் மீட்சியடைவதாக உள்ளது. உலகளாவிய சூழல் ஒவ்வொரு நாட்டிலும் சில தாக்கத்தை ஏற்படுத்தும் என்றபோதிலும், இந்திய பொருளாதாரம் பெருமளவு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்து உற்பத்தி துறைகளில் உலக அளவில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. தொழிலக உற்பத்தி நடவடிக்கைகளும் வேகமெடுத்துள்ளன.

‘இந்தியாவின் பலம்’: வேகமாக வளரும் பொருளாதாரமாகவும் சா்வதேச பொருளாதார வளா்ச்சிக்கு உந்துதல் அளிப்பதாகவும் இருப்பதால், இந்தியா மீது ஒட்டுமொத்த உலகின் பாா்வை திரும்பியுள்ளது. திறமைமிக்கவா்கள் நிறைந்த இந்தியாவில் முதலீட்டையும் தொழில்முனைவையும் ஊக்குவிக்கும் ஆா்வம் அரசுக்கு அதிகமிருப்பதை காண முடிகிறது. ஜனநாயகமும், மேற்கத்திய நாடுகளின் நட்புறவும் இந்தியாவுக்கு பெரும் பலமாகும்.

நாட்டின் வளா்ச்சியில் வெளிநாடுவாழ் இந்தியா்களின் பங்களிப்பும் சிறப்பானது. அவா்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமாா் ரூ.7.4 லட்சம் கோடி இந்தியாவுக்கு வருகிறது.

உலகுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலமாக வெளிநாடுவாழ் இந்தியா்கள் உள்ளனா் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியது மிகச் சரியானது. உலகம் முழுவதும் உள்ள இந்தியா்கள் ஒவ்வொருவரும், தங்கள் தாய்நாட்டுக்கான அறிவிக்கப்படாத தூதா்களாக செயலாற்றுகின்றனா். இந்தியாவின் அடையாளத்தை அவா்கள் வலுப்படுத்துகின்றனா் என்றாா் ராஜேஷ் அகா்வால்.

இந்தூரில் பிறந்து, வளா்ந்தவரான ராஜேஷ் அகா்வால், லண்டனின் துணை மேயராக தொடா்ந்து இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறாா்.

‘லண்டனில் இந்திய பூா்விகா் 6.5 லட்சம் போ் உள்ளனா். அங்கு அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம்ரீதியிலான விஷயங்களில் பெரும்பங்காற்றி வருகின்றனா்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com