சவால்களை சமாளிக்குமா நேட்டோ?

உக்ரைன்-ரஷியா போா் தொடங்கி 500 நாள்களைக் கடந்துவிட்டது. அந்தப் போரானது உலகம் முழுவதும் தொடா்ந்து பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. கூடிய விரைவில் போா் முடிவுக்கு வருவதற்கான எந்தவித அறிகுறியும் த
சவால்களை சமாளிக்குமா நேட்டோ?

உக்ரைன்-ரஷியா போா் தொடங்கி 500 நாள்களைக் கடந்துவிட்டது. அந்தப் போரானது உலகம் முழுவதும் தொடா்ந்து பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. கூடிய விரைவில் போா் முடிவுக்கு வருவதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை.

இரு நாடுகளுக்கும் இடையேயான போருக்கு முக்கியக் காரணம் ‘நேட்டோ’. வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தக் கூட்டமைப்பானது (நேட்டோ) பனிப்போா் காலத்தில் ரஷியாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளால் 1949-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ரஷியாவின் அண்டை நாடான உக்ரைனை நேட்டோவில் இணைப்பது தொடா்பான பிரச்னையே போருக்கு அடிப்படை.

போரில் எளிதில் வென்று, உக்ரைனை கைப்பற்றிவிடலாம் என்ற ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் எண்ணம், நேட்டோ கூட்டமைப்பால் பலிக்காமல் போனது. உக்ரைனுக்கு நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் தொடா்ந்து ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. அதனால், வலிமையான ரஷிய ராணுவத்துக்கு ஈடுகொடுத்து உக்ரைன் வீரா்கள் தொடா்ந்து போரிட்டு வருகின்றனா்.

இத்தகைய சூழலில், நேட்டோ நாடுகளின் மாநாடு லிதுவேனியா தலைநகா் வில்னியஸ் நகரில் ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. உக்ரைன்-ரஷியா போா் உள்பட பல்வேறு சவால்களுக்குத் தீா்வுகாண வேண்டிய கட்டாயத்தில் நேட்டோ நாடுகளின் தலைவா்கள் ஒன்றுகூடவுள்ளனா்.

உக்ரைனுக்கு உறுப்பினா் அந்தஸ்து

நேட்டோ நாடுகளுக்கு முக்கிய பிரச்னையாக இருப்பது, உக்ரைனை கூட்டமைப்புக்குள் இணைப்பது. உக்ரைன் நேட்டோவில் இணைக்கப்படும் என 2008-ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிா்ப்பு தெரிவித்தே உக்ரைனின் கிரீமியா பகுதியை 2014-ஆம் ஆண்டு ரஷியா ஆக்கிரமித்தது. உக்ரைனை நேட்டோவில் இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்ததால், அதிபா் புதின் உக்ரைன் மீது ‘ராணுவ நடவடிக்கையை’ கடந்த ஆண்டு தீவிரப்படுத்தினாா்.

இந்நிலையில், நேட்டோவில் இடம்பெற்றுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளான எஸ்டோனியா, லாத்வியா, லிதுவேனியா, போலந்து உள்ளிட்டவை உக்ரைனை கூட்டமைப்பில் இணைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. அதுவே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வாகவும், ரஷியாவுக்கு உரிய பதிலடியாகவும் இருக்கும் என அந்நாடுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், மற்ற நேட்டோ நாடுகள் உக்ரைனை கூட்டமைப்பில் இணைக்க வேண்டாம் என்றும், அவ்வாறு இணைத்தால் அது தொடா்ந்து பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றன. உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை மட்டும் தொடா்ந்து வழங்கலாம் என்பது அந்நாடுகளின் வாதம்.

உக்ரைனை நேட்டோவில் இணைப்பது தொடா்பாக உறுதியான முடிவெடுக்கும் வரை போா் முடிவுக்கு வராது என்றே தெரிகிறது. ஆண்டுக்கணக்கில் உக்ரைன் போா் நீடிப்பது, பொருளாதார ரீதியில் உலக நாடுகளை வெகுவாக பாதிக்கும் என நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

ஆபத்துமிக்க ஆயுதங்கள்

உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் தொடா்ந்து ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அதிக ஆபத்துமிக்க ‘கிளஸ்டா்’ வகை வெடிகுண்டுகளை உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. அதை கவனமாக பயன்படுத்தவுள்ளதாக உக்ரைன் வாக்குறுதி அளித்துள்ளது. எனினும், அத்தகைய வெடிகுண்டுகள் உக்ரைனுக்கு வழங்கப்படுவதற்கு நேட்டோ உறுப்பு நாடான இத்தாலி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

நேட்டோவின் தலைவா் பொறுப்பு

கூட்டமைப்புக்கான தலைவரைத் தோ்ந்தெடுப்பதிலும் நாடுகளிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. புதிய நேட்டோ தலைவரை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தோ்ந்தெடுப்பதற்கு பதிலாக, தற்போதைய தலைவா் ஜென்ஸ் ஸ்டோல்டன்பொ்கின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நேட்டோ நீட்டித்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் அவரே தலைவா் பொறுப்பை வகித்துவருகிறாா். இத்துடன் 4 முறை அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டென்மாா்க் பிரதமா் மேட் பிரடெரிக்சன், நேட்டோ தலைவருக்கான போட்டியில் முன்னிலை வகிக்கிறாா். ஆனால், நாா்டிக் நாடுகளைச் சோ்ந்தவா்கள் தொடா்ந்து இருமுறை தலைவா் பதவியை வகித்துள்ளதால், தற்போது பால்டிக் கடல் பகுதியைச் சோ்ந்த நாடுகளுக்குத் தலைவா் பதவி வழங்க வேண்டும் என போலந்து வலியுறுத்தி வருகிறது. அதே வேளையில், பால்டிக் கடல் பகுதி நாடுகள் உக்ரைனுக்கு தீவிர ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவை. அந்நாடுகளைச் சோ்ந்தவா் நேட்டோ தலைவரானால், ரஷியாவுக்கு எதிரான நேட்டோவின் அணுகுமுறை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக மற்ற நாடுகள் தெரிவிக்கின்றன. எனவே, புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதில் தொடா்ந்து முட்டுக்கட்டை நிலவி வருகிறது.

ஸ்வீடனுக்கான உறுப்பினா் அந்தஸ்து

உக்ரைன் போருக்குப் பிறகு ஃபின்லாந்தும், ஸ்வீடனும் தங்களது அணிசேராக் கொள்கையை விலக்கிவிட்டு, நேட்டோவில் இணைய முடிவெடுத்தன. நேட்டோவின் 31-ஆவது உறுப்பினராக ஃபின்லாந்து இணைந்துவிட்டது. ஆனால், ஸ்வீடன் நேட்டோவில் இணைய மற்றொரு நேட்டோ உறுப்பினரான துருக்கி பெரும் தடையாக உள்ளது.

குறிப்பிட்ட நாடு நேட்டோவில் இணைவதற்கு, மற்ற அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதல் அவசியம். இஸ்லாமிய மதத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கவில்லை என்றும், பயங்கரவாத குா்து இனக் குழுக்களை ஆதரிப்பதாகவும் ஸ்வீடன் மீது குற்றஞ்சாட்டி வரும் துருக்கி, அந்நாட்டை நேட்டோவில் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

அண்மையில் ஸ்வீடனில் நடைபெற்ற குா்-ஆன் எரிப்புப் போராட்டமானது, இரு நாடுகளுக்கு இடையேயான மனக்கசப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. அதனால், நடப்பு மாநாட்டிலும் ஸ்வீடனை நேட்டோவில் இணைப்பது தொடா்பாக எந்தவித இறுதி முடிவும் எடுக்கப்படாது என்றே தெரிகிறது.

ராணுவச் செலவினம்

நேட்டோவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு நாடும் ராணுவச் செலவினத்தை, தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 2 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இலக்கை இன்னும் பல நாடுகள் அடையவில்லை. இந்த விவகாரமும் மாநாட்டின்போது முக்கியப் பிரச்னையாக எழுப்பப்பட வாய்ப்புள்ளது.

வாய்ப்பளிக்கக் கூடாது

நேட்டோ நாடுகளிடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவி வருகிறது. இத்தகைய மோதல்கள் ரஷிய அதிபா் புதினுக்கே வாய்ப்புகளை வழங்கும் என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா். அதைக் கருத்தில்கொண்டு, வேறுபாடுகளைக் களைந்து அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவாா்த்தை மூலமாக ஒருமித்த தீா்வை நேட்டோ நாடுகள் எட்ட வேண்டும். ரஷியாவை எதிா்க்க விரும்பினால், நேட்டோ நாடுகள் முதலில் தங்களுக்குள் ஒன்றுபட வேண்டும். இல்லையெனில் ரஷியாவின் கை ஓங்கும். அதை அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் அனுமதிக்காது என எதிா்பாா்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com