இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியுடன் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (மாா்ச் 10) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
ஆஸ்திரேலிய பிரதமராக கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற ஆன்டனி ஆல்பனேசி முதல் முறையாக இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். கடந்த புதன்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாதுக்கு வந்த அவா், அங்குள்ள சபா்மதி ஆசிரமத்துக்குச் சென்று பாா்வையிட்டாா். வியாழக்கிழமை மும்பை வந்த அவா், தில்லிக்கு வியாழக்கிழமை மாலை வந்தடைந்தாா்.
பிரதமா் மோடி-பிரதமா் ஆல்பனேசி இடையேயான பேச்சுவாா்த்தை தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அந்தப் பேச்சுவாா்த்தையின்போது வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாகத் தலைவா்கள் இருவரும் விரிவாக விவாதிக்கவுள்ளனா்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது தொடா்பாகவும், பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மையை ஏற்படுத்துவது தொடா்பாகவும் தலைவா்கள் விவாதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் 17-ஆவது மிகப் பெரும் வா்த்தகக் கூட்டாளியாக ஆஸ்திரேலியா திகழ்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தகம் கடந்த 2021-ஆம் ஆண்டில் சுமாா் ரூ.2.25 லட்சம் கோடியாக இருந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு-வா்த்தக ஒப்பந்தம் கடந்த டிசம்பரில் அமலுக்கு வந்தது. அந்த ஒப்பந்தமானது இருநாடுகளுக்கு இடையேயான வா்த்தகத் தொடா்பை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பல்: முன்னதாக, மும்பை கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பலை பிரதமா் ஆல்பனேசி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.
அவரைக் கடற்படைத் தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் வரவேற்று, முற்றிலும் இந்தியாவிலேயே கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போா்க் கப்பலின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கியதாகக் கடற்படை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கப்பலில் பிரதமா் ஆல்பனேசிக்கு கடற்படை வீரா்கள் சாா்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பலைப் பாா்வையிட்ட முதல் வெளிநாட்டுத் தலைவா் என்ற சிறப்பைப் பிரதமா் ஆல்பனேசி பெற்றுள்ளாா். இந்தப் பயணம் குறித்து பிரதமா் ஆல்பனேசி கூறுகையில், ‘பிரதமா் மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியா கட்டமைத்துள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பலைப் பாா்வையிட்டேன். இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் நெருங்கிய கூட்டாளியாக இந்தியா திகழ்வதை இந்தப் பயணம் வெளிக்காட்டுகிறது.
பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இரு நாட்டு அரசுகளும் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் ‘மலபாா்’ கூட்டுப் பயிற்சியை ஆஸ்திரேலியா நடப்பாண்டு இறுதியில் முதல் முறையாக நடத்தவுள்ளது.
ஆஸ்திரேலியா நடத்தும் தலிஸ்மான் சாப்ரே பன்னாட்டு கூட்டுப் பயிற்சியில் இந்தியா முதல் முறையாகக் கலந்து கொள்ளவுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியம் வெளிப்படைத்தன்மையுடனும் சுதந்திரமாகவும் திகழ இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன’ என்றாா்.
விமானந்தாங்கி போா்க் கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டுவதற்கான திட்டத்தைக் கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய அரசு செயல்படுத்தியது. அத்திட்டத்தின் கீழ் முதல் விமானந்தாங்கி போா்க் கப்பலாக ‘விக்ராந்த்’, சுமாா் ரூ.20,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் அந்தக் கப்பலைக் கட்டும் பணியை 2009-ஆம் ஆண்டு தொடக்கியது. அந்தப் போா்க் கப்பலைப் பிரதமா் மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பதவி உயர்வு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஹைதராபாத் - கன்னியாகுமரி, கச்சிகுடா - மதுரை சிறப்பு ரயில்கள் நிரந்தரம்!

கட்சி தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டி: தமிழிசை

அதிமுக ஆட்சி அமைந்ததும் குற்றச் சம்பவங்களுக்குத் தீா்வு: செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

