பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட மனிதர்: 40 நாள்களுக்குப் பிறகு உயிரிழப்பு!

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட மனிதர் உயிரிழந்துள்ளார்.
பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட மனிதர்: 40 நாள்களுக்குப் பிறகு உயிரிழப்பு!
Published on
Updated on
1 min read

நவீன மருத்துவ அறிவியல் வியக்கத்தகு அளவில் முன்னேறி வருகிறது. மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வளிக்க பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அப்படியான பரிசோதனை முயற்சி ஒன்றினால் வெற்றிகரமாக தனது இறப்பைத் தள்ளி வைத்த மனிதரின் அதிர்ஷ்டம் 40 நாள்களுக்கு மேல் நீடிக்கவில்லை.

அமெரிக்காவின் மேரிலாண்ட் மருத்துவ கல்லூரியின் மருத்துவர்கள் குழு, கடந்த செப்.20-ம் தேதி 58 வயதான லாரன்ஸ் பேஸட் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர். முன்னாள் கடற்படை வீரரான இவரின் இதயம் செயலிழந்த நிலையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 வாரங்கள் பிழைத்த லாரன்ஸ், திங்கள்கிழமை (அக்.30) அன்று உயிரிழந்துள்ளார்.

“லாரன்ஸ், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது, குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது, சீட்டுக்கட்டு விளையாடுவது என குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி வந்தார். ஆரம்ப நாள்களில் அவர் உடல், மறுப்பிற்கான அறிகுறிகளைக் காட்டினாலும் இது வழக்கமான இதய மாற்று அறுவை சிகிச்சையிலும் நடக்கக் கூடியது தான். மருத்துவர்களின் முயற்சியால் அவர் அக்.30 வரை பிழைத்திருந்தார்” என மேரிலாண்ட் மருத்துவ கல்லூரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் சிகிச்சைக்கு ஜீனோ உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்று பெயர். இந்த அறுவை சிகிச்சை முறை, மிகுந்த சவால் நிறைந்தது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இன்று பெருமளவில் நடைபெற்று வந்தாலும் மனித உறுப்புகள் எளிதில் கிடைக்கக் கூடியன அல்ல. இந்த நிலையில், விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு ஏற்றாற்போல மரபணு மாற்றம் செய்யப்பட்டு பொருத்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேரிலாண்ட் மருத்துவமனை மேற்கொள்ளும், பன்றியின் இதயத்தை மனிதர்களுக்கு பொருத்தும் இரண்டாவது அறுவை சிகிச்சை இது.

முதல் அறுவை சிகிச்சை, 2022 ஜனவரி 7-ல் டேவிட் பெனட் என்பவருக்கு மேற்கொள்ளப்பட்டது. அவர் இரண்டு மாதங்கள் வரை உயிருடன் இருந்தார்

இன்னும் இந்த ஆராய்ச்சியில் நீண்ட கால நோக்கில் மேம்பட்ட முடிவுகள் கிடைக்கப் பெறலாம் என நம்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com