நீங்கள் பார்ப்பது வெறும் 5 சதவீதம் மட்டுமே: கதறும் காஸா மக்கள்!

காஸாவிலிருந்து வெளிநாட்டவர்களை வெளியேற்ற உதவுவதாக எகிப்து அறிவித்தது முதல் ராஃபா எல்லை வழியாக மக்கள் வெளியேறி வருகின்றனர்.
ஜபாலியா அகதிகள் முகாமில் இருந்து மீட்கப்படும் சிறுமி
ஜபாலியா அகதிகள் முகாமில் இருந்து மீட்கப்படும் சிறுமி

போர் ஆரம்பித்தது முதல், நவம்.1 புதன்கிழமை அன்று முதன்முறையாக ராஃபா எல்லை மக்களுக்காகத் திறக்கப்பட்டது. காயமுற்ற பாலஸ்தீனர்கள் உள்பட 500 பேர் வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் 400 பேர் இன்று (நவம்.2) வெளியேற்றப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் வெளிநாட்டவர்கள், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், காயமுற்ற பாலஸ்தீனர்கள் (60 முதல் 100 பேர்) அடங்குவர்.

எல்லையைக் க்டக்க விண்ணப்பிக்கும் இரட்டை குடியுரிமையுள்ள காஸா மக்கள்
எல்லையைக் க்டக்க விண்ணப்பிக்கும் இரட்டை குடியுரிமையுள்ள காஸா மக்கள்

சர்வதேச ஊடகமொன்றுக்கு எகிப்திய கடவுச்சீட்டு கொண்டிருந்த பெண் அளித்த பேட்டி காண்போரை உலுக்கச் செய்கிறது. அவரது குழந்தைக்கு அடையாள அட்டை இல்லாததால் வெளியேற மறுக்கப்பட்டுள்ளார். தற்காலிகமாக அடையாள அட்டை கொடுத்தும் இன்னும் வெளியே அனுமதிக்கவில்லை.

“எகிப்திய அதிகாரிகளிடம் இருந்து எனக்கு பதில் வேண்டும். 20 நாள்களுக்கு முன்பிருந்து இங்கு காத்திருக்கிறோம். எனது கணவர் கொல்லப்பட்டு விட்டார். இரண்டு குழந்தைகளில் ஒன்று எகிப்தில் உள்ளது. அந்தக் குழந்தை அநாதையாக உள்ளது. நானும் எனது மகளும் இங்கு சிக்கிக் கொண்டுள்ளோம். எங்களின் வீடு அழிக்கப்பட்டு விட்டது. எனக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. தெருவில் அநாதைகளாக வாழ்கிறோம். எகிப்திய குடிமகள் என்கிற முறையில் எங்களை மீட்டு செல்ல வேண்டியது அரசின் கடமை” என தெரிவித்துள்ளார்.

எல்லையைக் கடக்க காத்திருப்போர்
எல்லையைக் கடக்க காத்திருப்போர்

மற்றொரு பெண், “நாங்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டிருக்கிறோம். சூழல் விவரிக்க முடியததாக மாறியுள்ளது. நீங்கள் தொலைகாட்சியில் பார்ப்பது இங்கு நடப்பதில் வெறும் 5 சதவீதம் மட்டுமெ. மக்கள் கொல்லப்படுகின்றனர், துண்டுபடுகின்றனர், கருகி இறக்கின்றனர். குழந்தைகள் கொல்லப்பட்டும் அநாதரவாகவும் விடப்படுகின்றன. வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு ராஃபா எல்லைக்குத் துரத்தப்பட்டு இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

காஸாவில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 9,061 எனவும் அவர்களில்  குழந்தைகள் 3,760 பேர் எனவும் தெரிவிக்கிறது, காஸா சுகாதார அமைச்சகம்.

காஸாவின் 35 மருத்துவமனைகளில் 16 மருத்துவமனைகள் முடங்கியுள்ளன. புற்றுநோய்க்கான ஒரேயொரு மருத்துவமனையும் மூடப்படும் நிலையில் உள்ளது. அந்த மருத்துவமனையில் உள்ள 70 புற்றுநோய் நோயாளிகள் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காஸா அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com