காசாவிற்கு மருத்துவ உதவி: விமானங்களை அனுப்பியது ரஷியா!

காசாவிற்கு மருத்துவ உதவி: விமானங்களை அனுப்பியது ரஷியா!

ரஷியாவின் அவசரகால அமைச்சகம் காசாவிற்கு மருத்துவ உதவிகளுடன் கூடிய  இரண்டு விமானங்களை உதவிக்கு அனுப்பியுள்ளது. 

ரஷிய அதிபர் புதின் ஆணைப்படி, மருத்துவ உதவிகளுடன் கூடிய இரண்டு விமானங்களை அந்நாட்டின் அவசரகால அமைச்சகம் காசாவிற்கு அனுப்பியுள்ளது. மருந்துப் பொருள்கள், இரத்தக்கசிவு நிபுணர்கள் மற்றும் காயங்களுக்கு கட்டுப்போடத் தேவையான பொருள்கள் என மிக அவசியமான உதவிகளை ரஷியா அனுப்பியுள்ளது.

இரண்டு விமானங்களும் கொண்டு செல்லும் பொருட்களின் மொத்த எடை 28 மெட்ரிக் டன்கள் ஆகும். இந்தப் பொருட்கள் எகிப்த் ரெட் கிரெசென்ட் சொசைட்டி (Egyptian Red Crescent Society) மூலம் உதவி தேவைப்படும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ரஷியா  27 மெட்ரிக் டன் அளவிலான உணவுப்பொருட்களை காசாவிற்கு அனுப்பி உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், காசாவில் நடக்கும் போர் தொடர்பாக அமெரிக்கா தயாரித்த தீர்மானத்தை ரஷியாவும் சீனாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தத் தீர்மானம், ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்கீழ் பிடித்துவைத்திருக்கும் பிணைக்கைதிகளை விடுவிக்கக்கோரும் விதமாகவும் அமைந்திருந்தது.

ரஷியாவும் சீனாவும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தபின் ஐக்கிய நாடுகள் சபையின் இஸ்ரேலிய தூதர் கிலாட் எர்டன், "நாங்கள் எங்கள் நாட்டில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறோம். இதைப்போன்ற படுகொலைகள் உங்களில் எந்த நாட்டிற்கு நிகழ்ந்திருந்தாலும் நீங்கள் இஸ்ரேலைவிட மிகவும் வலிமையான முறையில் பதிலளிக்க தயங்கியிருக்க மாட்டீர்கள் என எனக்கு நன்றாகத் தெரியும்" எனக் கூறினார். 

மேலும் ரஷியா, இஸ்ரேலுக்கு எதிரான ஹிஸ்புல்லா போராட்டக் குழுவிற்கு நவீன வான்வழி பாதுகாப்பிற்கான ஏவுகணை அமைப்பைத் தரவிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com