கூகுள் மீது எபிக் கேம்ஸ் நிறுவனம் வழக்கு !

கூகுள் நிறுவனம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி 'கட்டாயக் கட்டணம்' வசூலிப்பதாக எபிக் கேம்ஸ் (Epic Games) வழக்கு பதிவு செய்துள்ளது. 
கூகுள் மீது எபிக் கேம்ஸ் நிறுவனம் வழக்கு !
Published on
Updated on
1 min read

கூகுள் நிறுவனம் அதன்மேல் தொடரப்படும் பல வழக்குகளை எதிர்கொண்ட வண்ணம் உள்ளது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை கையாளும் முறை குறித்த கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. அவையனைத்தையும் எதிர்கொண்டுவரும் கூகுள் நிறுவனத்தின் மேல் 'கட்டாய கட்டணங்களை' விதிப்பது தொடர்பான மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

எபிக் கேம்ஸ் (Epic games) நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டு ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் மேல் இந்த வழக்கினைத் தொடர்ந்தது. ஆப்பிள் நிறுவனம் நீதி மன்றத்தில் ஆஜர் ஆகி நீண்ட நாளுக்குப் பிறகு தீர்ப்பு வழக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 2023 நவம்பர் 6 அன்று கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி பதிலளிக்க உள்ளார்.

கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் எபிக் நிறுவனத்தின் செயலிகள் வாடிக்கையாளர்களுக்கு கட்டணமின்றி இலவசமாக கிடைக்கின்றன. அவர்களின் விளையாட்டுச் செயலிக்குள் உள்ள பொருட்களை வாங்க (In-game purchases) வி-கரன்சி எனும் டிஜிட்டல் நாணயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வி-கரன்சியை வாங்க மக்கள் எபிக் நிறுவனத்திற்கு பணம் செலுத்துகிறார்கள், அதன் மூலமே அந்நிறுவனம் வருவாய் ஈட்டி வருகிறது.

ஆனால் மக்களால் அந்த வி-கரன்சியை நேரடியாக வாங்க முடிவதில்லை. ஏனெனில் எபிக் நிறுவனத்திற்கும் பயனாளர்களுக்கும் இடையே கூகுள் நிற்கிறது. பணப்பரிவர்த்தனைகள் கூகுளின் வழியாக மட்டுமே நடைபெற வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதோடு பயனாளர்கள் செலுத்தும் பணத்தில் 30 சதவீத பணம் கூகுளால் எடுத்துக்கொள்ளப்பட்டு மீத பணம் மட்டுமே எபிக் நிறுவனத்தை அடைகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த எபிக் நிறுவனம் தங்களுக்கென புதிய கட்டண வசதியை அறிமுகப்படுத்தியது. ஆனால் கூகுள் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. கண்டிப்பாக கூகுளின் வழியாக மட்டுமே பணபரிவர்த்தனைகள் நடைபெற வேண்டுமென வலியுறுத்தியது. எனினும் கூகுள் நிறுவனத்தின் கொள்கைகளை மீறி எபிக் தனது புதிய பணப்பரிவர்த்தன வசதியை மக்களுக்கு அறிமுகம் செய்தது. அதனால் கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களிலிருந்து எபிக் நிறுவன செயலி தடை செய்யப்பட்டது.

எபிக் நிறுவனம் இப்போது செயலிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ற பணப்பரிவர்த்தன முறைகளை கையாள அனுமதிக்கப்பட வேண்டும் என இந்த வழக்கினைத் தொடர்ந்துள்ளது. கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு போன்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த கட்டாய கட்டணத்தை வசூலிப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இரண்டு தரப்புகளும் நவம்பர் 6ல் நீதிமன்றத்தைச் சந்திக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com