''டெல் அவிவ்' நகரில் இஸ்ரேலுக்கான 80 நாடுகளின் தூதர்களைச் சந்தித்துப் பேசினார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
இஸ்ரேலின் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இஸ்ரேலுக்கான வெளிநாட்டுத் தூதர்களை நெதன்யாகு நேரில் சந்தித்துப் பேசியபோது, தூதர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு ஆதரவான தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்.
அக். 7-ல் இஸ்ரேலுக்கு நடந்த பயங்கரத்தை நினைவில் கொண்டு, தங்கள் நாடுகளிலும் செயல்படுவதாகவும் அனைத்து தூதர்களும் உறுதியளித்தனர்.
வெளிநாட்டுத் தூதர்களிடம் பேசிய பிரதமர், 'இப்போது நடந்துகொண்டிருப்பது, நாகரீகச் சமுதாயத்திற்கும் காட்டுமிராண்டிகளுக்கும் இடையேயான போர்' எனக் கூறினார்.
"காட்டுமிராண்டித் தனத்தைப் பயங்கரவாதம் வழிநடத்துகிறது. இந்தப் பயங்கரவாதத்துக்கு ஈரான் தலைமை வகிக்கிறது. இதற்குள் ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஹௌதிஸ் ஆகியவையும் அவற்றின் சகாக்களும் அடங்குவார்கள்.
"இந்த அமைப்புகள் யாவும் மத்திய கிழக்கையும் உலகத்தையும் மீண்டும் இருண்ட காலத்துக்குள் தள்ள முயன்றுவருகின்றன. இவை இஸ்ரேலுக்கும் மற்ற அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள நட்புறவு முயற்சிகளை முறியடிக்க முயன்று வருகின்றன. அவர்கள் வலுப்பெற்றால், அவர்கள் தோற்கடிக்கப்படாவிட்டால், ஒட்டுமொத்தமாக மத்திய கிழக்கை நாசப்படுத்திவிடுவார்கள். பயங்கரவாதத்தின் கரங்களில் மத்திய கிழக்கு விழுந்தால், அவர்களின் அடுத்த இலக்கு ஐரோப்பாதான். யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது"
"இது வெறும் ஹமாஸ் - இஸ்ரேல் இடையான உள்ளூர்ச் சண்டை அல்ல, இது உலகளாவிய சண்டை. இந்தப் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியம். வெற்றிக்கு இணை வேறு எதுவுமில்லை.
"இஸ்ரேல் ஹமாஸைத் தோற்கடிக்கப் போவது உறுதி. எங்களது வெற்றிக்குப் பிறகு காஸா மற்றும் மொத்த மத்திய கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தருவோம். இந்த போரில் மொத்த மனித சமுதாயமும் எங்களுடன் துணைநிற்கும் என நம்புகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.