முடிவுக்கு வந்தது ஹாலிவுட் நடிகர் சங்க வேலைநிறுத்தம்!

லாஸ் ஏஞ்சலீசில் 4 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்றுவந்த நடிகர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் முடிவுக்கு வந்தது.
முடிவுக்கு வந்தது ஹாலிவுட் நடிகர் சங்க வேலைநிறுத்தம்!

ஹாலிவுட்டில் பல மாதங்களாக நடைபெற்றுவந்த மிகப் பெரும் நடிகர் சங்கப் போராட்டம் தற்காலிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்தது.

எனினும், மீண்டும் பழையபடி தொடர்களும் திரைப்படங்களும் வெளிவர இன்னும் சில மாதங்களாகும் எனத் தெரிகிறது.

இந்த ஒப்பந்தத்தால் ஆறு மாதங்களுக்கும் மேலாக லாஸ் ஏஞ்சலீஸில் வேலையின்றித் தவித்த அனைத்து திரை மற்றும் தொடர்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் துயரும் களையப்பட்டுள்ளது. விரைவில் பத்தாயிரத்திற்கும் மேலான தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும்.

வேலைகள் மீண்டும் துவங்கப் போகும் நிலையில், மக்கள் அதிகம் எதிர்பார்த்த 'டெட்பூல், ஆபட் எலமன்டரி, தி லாஸ்ட் ஆப் அஸ்' ஆகிய படைப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர் போராட்டம் வெற்றியைத் தந்துள்ளதால் அனைத்து நடிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கான  நடிகர் சங்கம் (SAG - ASTRA) தயாரிப்பாளர் சங்கத்தினருடனான தொழில் ரீதியான முரண்பாடுகளால் 4 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்த நீண்ட கால காத்திருப்பு உரிய பலனை நடிகர்களுக்குத் தந்திருப்பதாக, நடிகர் சங்கத்தின் தலைமை இயக்குநரும் தலைமைப் பிரதிநிதியுமான டங்கன் தெரிவித்துள்ளார். 

இந்த தற்காலிக ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள மொத்த விவரங்களும் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். எனினும் அதன் முக்கிய அம்சங்கள் சில மட்டும் தெரியவந்துள்ளன. அதில் 40 வருடங்களாக இல்லாத அளவில் நடிகர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தில் உயர்வு, மற்றும் நடிகர்களுக்குப் பதிலாக செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரிவான ஒப்புதல் மற்றும் இழப்பீடு ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

மேலும் அடுத்தகட்டமாக தொடங்கப்பட அல்லது வெளிவரப் போகும் திரைப்படம் மற்றும் தொடர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'மிசன் இம்பாஸிபிள்' மற்றும் 'கிளாடியேட்டர்'  ஆகிய பெரிய படைப்புகள் இடம் பெற்றிருந்தன.

மேலும் போராட்டத்திற்கு முன்பாக நடிகர்கள் நடித்து முடித்த படங்களின் அறிமுக நிகழ்ச்சிகளிலும் நேர்காணல்களிலும் பங்கு பெறக்கூடாது என்றிருந்த விதிமுறையும் நீக்கப்பட்டதால் மக்கள் தங்கள் விருப்பமான நடிகர்களை விரைவில் நேரிலும் சின்னத்திரையிலும் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com