பாகிஸ்தான் : ஒரே நாளில் 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்! 4 பேர் பலி!

பாகிஸ்தானில் நடைபெற்ற 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 
பாகிஸ்தான் : ஒரே நாளில் 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்! 4 பேர் பலி!

பாகிஸ்தான் நசிராபாத் நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மூன்று இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒரே நாளில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

ஜமல்-வா கிராமத்தில் துப்பாக்கியுடன் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் இருந்த தாயையும் மகளையும் சுட்டுத் தள்ளினர். தகவல் அறிந்து வந்த காவல்துறை இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலில் பல குண்டடிகள் பட்டதால் ரோபினா பிபி மற்றும் சால்மா ஆகிய இருவரும் உடனே உயிரிழந்துள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தக் கொலை, பழைய பகை காரணமாகக் கூட நடந்திருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர் அதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த சம்பவம், ஜான்ட் பகுதியில் நடைபெற்றுள்ளது. இது இரண்டு பழங்குடியினருக்கு இடையேயான நிலத்தகராரினால் நிகழ்ந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பக்டி மற்றும் பங்கார் பழங்குடியினருக்கு இடையே நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இரண்டு தரப்பிலிருந்தும் மொத்தம் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சண்டையில் தானியங்கித் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

ஒரு மணி நேரம் இந்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பலியான மற்றும் காயமடைந்தோரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பலியான நபர் மிர் ஜன் பங்வார் ஆவார். அவரது மகனும் இந்தச் சண்டையில் படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அடுத்த சம்பவம் தேரா முராத் ஜமாலி நகரில் டோம்கி பகுதியில் நடைபெற்றுள்ளது. இங்கு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சொஜாலா கான் என்பவர் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com