உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவுக்கு ட்ரோன் தாக்குதல்கள்!

உக்ரைனில் வான்வழி ‘ட்ரோன்’கள்  மூலம் ரஷியா தீவிர  தாக்குதலை  நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவுக்கு ட்ரோன் தாக்குதல்கள்!

கீவ் :  உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

இந்தப் போரில் இதுவரை இல்லாத அளவுக்கு, இன்று (நவ. 25) காலை, வான்வழி ‘ட்ரோன்’கள் மூலம் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. 

போர் தொடங்கி கடந்த ஒன்றரையாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தநிலையில், உக்ரைன் தலைநகர் கீவில், இதுவரை நடத்தப்படாத அளவுக்கு, தீவிர ட்ரோன் தாக்குதலை, இன்று  ரஷிய படைகள் தொடுத்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் தான் முக்கி்ய குறியாக இருந்தது என்று உக்ரைன் விமானப்படைத் தளபதி மைகோலா ஓலேஷ்சுக் டெலிகிராம் சேனலில் தெரிவித்துள்ளார்.

ஈரானில் தயாரிக்கப்பட்ட 75 ட்ரோன்கள் மூலம், கீவ் நகரை குறிவைத்து ரஷியா தாக்குல் நடத்தியதாகவும், அவற்றில் 74 ட்ரோன்கள் உக்ரைன் படைகளால் வெற்றிகரமாக  சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும்  உக்ரைன் விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி, அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ட்ரோன் தாக்குதல், 6 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்தது. இந்த தீவிர ட்ரோன் தாக்குதலில், ஒரு சிறுமி உள்பட பொதுமக்கள்  5 பேர் காயமடைந்ததாகவும், நகரில் பல கட்டடங்கள் சேதமடைந்ததாகவும்  கீவ் நகர மேயர் விதாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.   

ட்ரோன் தாக்குதலால்  கீவ் நகரில் பல குடியிருப்புகளில் மின்சார வினியோகம் தடைபட்டதாகவும், 17,000 பேர் மின்சாரம் இன்றி அவதிப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து,  உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி டெலிகிராமில் பதிவிட்டுள்ளதாவது, “உக்ரைன் வீரர்கள்  பெரும்பாலான ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஆனால், துரதிருஷ்டவசமாக அனைத்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்த முடியவில்லை. எனினும், அதிக ட்ரோன்களை சுட்டு வீழ்த்த ஏதுவாக, விமான பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த நாங்கள் தொடர்ந்து உழைத்து வருகிறோம்”  என்று பதிவிட்டுள்ளார்.

கீவ் மட்டுமன்றி சுமி, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், ஜாபோரிஜியா, மைகோலைவ் மற்றும் கிரோவோஹ்ராட் பகுதிகள் மீதும் ரஷியா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. 

முன்னதாக, 1932 - 1933 ஆண்டு காலகட்டத்தில், சோவியத் உக்ரைனில்  தலைவிரித்தாடிய பஞ்சத்தால்  லட்சக்கணக்கான மக்கள்  உயிரிழந்தனர். இந்தநிலையில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக  வருடந்தோறும் நவம்பர் மாதம் 4-வது சனிக்கிழமை ‘ஹோலோடோமோர் நினைவு நாள்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது.  அந்த வழக்கத்தின்படி, இன்று (நவ. 25) நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட நிலையில், ரஷிய படையினர்
ட்ரோன் தாக்குதலை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com