50 பத்திரிகையாளர்களைக் கொன்றது இஸ்ரேல்!: சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு

ஊடகப் பணியாளர்களைக் காக்கும்படியான வேண்டுகோளை மீறி பலரை இஸ்ரேல் கொன்றுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 
50 பத்திரிகையாளர்களைக் கொன்றது  இஸ்ரேல்!: சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு

ஹாமாஸ் - இஸ்ரேலுக்கு இடையே நடந்துவரும் போரில் இதுவரை 50 பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்டதாக சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பான 'ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்' (Reporters Without Borders) குற்றம் சாட்டியுள்ளது. 

இதுவரை 70 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன பத்திரிகையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. "இஸ்ரேல் ஊடகப் பணியாளர்களை காக்கும்படியான வேண்டுகோளை மீறி பலரைக் கொன்றுள்ளது" என அந்த அமைப்பு தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கடந்த நவ.22 அன்று பதிவிட்டிருந்தது. 

"இதுவரை 11 பத்திரிகையாளர்கள் பணியின்போது கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச பத்திரிகை நிபுணர்கள் காஸாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் பத்திரிகைத் துறையும் அழிக்கப்பட்டுவருகிறது" என சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பின் மத்திய கிழக்குப் பகுதிக்கு தலைமை வகிக்கும் ஜானதன் டேகர் தெரிவித்துள்ளார். 

மேலும், அங்குள்ள பத்திரிகையாளர்களைப் பாதுகாக்க சர்வதேச அமைப்புகள் முயற்சி எடுக்கவேண்டும் எனவும், உள்ளே இருக்கும் பத்திரிகையாளர்கள் வெளியேற ரஃபா எல்லை திறக்கப்பட வேண்டும் எனவும், காஸாவிற்குள் நுழைய சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நவ.23 வரை 56 பத்திரிகையாளர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

பிரபல பத்திரிகையாளர் பிலால் ஜடல்லா இஸ்ரேலின் நேரடித் தாக்குதலுக்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை பல ஊடகங்கள் கண்டித்துவருகின்றன. 2023ல் உலகளவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் மரணத்திற்கு இஸ்ரேல் பொறுப்பு வகிக்கிறது எனக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com