
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் போர் நிறுத்தப்பட்டது. கைதிகள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றே போர் நிறுத்தத்தின் கடைசி நாள் என்பதால், நாளைமுதல் போர் துவங்குமா அல்லது தற்காலிகப் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
'போர் நிறுத்தத்தை நீட்டிப்பதுதான் நமது இலக்கு. இன்னும் நிறைய பிணைக் கைதிகளை மீட்கவும், காஸாவில் உள்ள மக்களுக்கு நிறைய மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்கும் போர் நிறுத்தம் மிகவும் அவசியமாக உள்ளது என அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து பிணைக் கைதிகளும் வெளியேறும்வரை போர் நிறுத்தத்தைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டுமுதல் நான்கு நாள்களுக்கு போரை நிறுத்த ஹமாஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் மூலம் மேலும் பல கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச நாடுகளும், இஸ்ரேல் பிணைக் கைதிகளின் குடும்பங்களும் இஸ்ரேலைப் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வலியுறுத்தி வருகின்றனர். மேலும், ஒரு நாளைக்கு 200 லாரி மனிதாபிமான உதவிகளை 2 மாதத்திற்கு அனுப்புவது மிகவும் அவசியம் என ஐ.நாவின் பாலஸ்தீன அகதிகளுக்கான செய்தித் தொடர்பாளர் அத்னான் அபு ஹன்சா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : மலேசியாவுக்கு டிச. 1 முதல் விசா இல்லாமல் பயணிக்கலாம்!
“நாங்கள் வெற்றியடையும்வரை ஓயமாட்டோம்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த ஞாயிறு அன்று தெரிவித்துள்ளார். போருக்குத் தேவையான ரூ. 900 கோடி பட்ஜெட்டை இஸ்ரேல் தயார் செய்து வைத்திருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், பிரதமர் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவித்து ஹமாஸ் அமைப்பை அழிக்க உறுதியேற்கும் காணொளி சமீபத்தில் அவரது அலுவலகத்தால் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 'எங்களை யாராலும் தடுக்க முடியாது, போரில் வெற்றி பெருவதற்கான வலிமை எங்களிடம் உள்ளது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காஸாவின் மக்கள் அனைவரையும் வடக்குப் பகுதியைவிட்டு வெளியேறும்படி இஸ்ரேல் கூறியுள்ளது. காஸாவில் இருந்த 24 லட்சம் மக்களில் 17 லட்சம் மக்கள் இந்தப் போரினால் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. நான்கு நாள்களாக மனிதாபிமான உதவிகள் காஸாவிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போர் நிறுத்தத்தை நீட்டிக்க இஸ்ரேலின் நட்பு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.