
காலிஸ்தான் பிரிவினைவாதியை அமெரிக்காவில் கொலை செய்ய நடந்த முயற்சியில் இந்தியருக்கு தொடர்புள்ளதாக வெளியான தகவலைக் குறிப்பிட்டு இதனைத்தான் ஆரம்பத்திலிருந்து சொல்லி வருவதாகவும் இந்த விவகாரத்தில் இந்தியா தீவிரம் காட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
கனடா மண்ணில் கொலை செய்யப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் வழக்கில் இந்திய அரசின் தொடர்பு குறித்து குற்றசாட்டுகளைக் கனடா ஆகஸ்ட் முதல் தெரிவித்து வருவதாகவும் கனடிய அதிகாரிகள் அமெரிக்காவுடன் தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020-ல் இந்தியா காலிஸ்தான் பிரிவினைவாதியான நிஜ்ஜாரைப் பயங்கரவாதி என அறிவித்தது. ஆனாலும் ட்ரூடோ முன்வைக்கிற குற்றச்சாட்டை அபத்தம் மற்றும் உள்நோக்கம் கொண்டது என விமர்சித்துள்ளது இந்திய அரசு.
அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல முயன்ற சதியை முறியடித்துள்ளது அந்நாட்டு அரசு. இதில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள 52 வயதான நிகில் குப்தா இந்திய அரசால் கொலை செய்ய நியமிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
கனடா பிரதமர், “அமெரிக்காவில் இருந்து வந்துள்ள செய்தி, ஆரம்பத்தில் இருந்து நாங்கள் என்ன சொல்லி வருகிறோமோ அதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்தியா இதில் தீவிரம் காட்ட வேண்டும். இந்திய அரசு எங்களுடன் இணைந்து இந்தப் பிரச்னையின் பின்னணியை விசாரிக்க ஒத்துழைப்பு தர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , கனடா மக்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரூடோ, “எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல இது. கனடியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே எங்களின் பொறுப்பு, அதனை தொடர்ந்து நாங்கள் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.