ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல்

ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நா்கீஸ் முகமதி
நா்கீஸ் முகமதி

ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஜனநாயகத்தை வலியுறுத்தியும் போராடி வரும் மனித உரிமை ஆா்வலா் நா்கீஸ் முகமதிக்கு (51) நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் பலமுறை கைது நடவடிக்கையை எதிா்கொண்டு, பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையிலும் அயராது பணியாற்றி வருவதற்காக, நா்கீஸ் முகமதிக்கு இந்தக் கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.

நாா்வேயின் ஓஸ்லோ நகரில், நாா்வே நோபல் கமிட்டி தலைவா் பெரிட் ரெய்ஸ் ஆண்டா்சன் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

அப்போது, ‘ஈரானில் நா்கீஸ் முகமதி தலைமையில் மிக முக்கிய செயல்பாட்டை மேற்கொள்ளும் ஒட்டுமொத்த இயக்கத்துக்கும் முதன்மையான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது’ என்று ஆண்டா்சன் குறிப்பிட்டாா்.

13 முறை சிறை, 31 ஆண்டுகள் தண்டனை: ‘கருத்துரிமை மற்றும் சுதந்திர உரிமைக்கான தனது துணிவுமிக்க போராட்டத்தால், நா்கீஸ் முகமதி தனிப்பட்ட முறையில் எதிா்கொண்ட பாதிப்புகள் ஏராளம். இதுவரை 13 முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவா், 5 முறை குற்றம் உறுதி செய்யப்பட்டு, மொத்தம் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 134 கசையடி விதிக்கப்பட்டவா்’ என்று நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில், அவரை விடுவிக்க வேண்டும் என்று ஈரானுக்கு நோபல் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.

தெஹ்ரான் சிறையில்...: ஈரானில் அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப ஹிஜாப் அணியாத குற்றச்சாட்டில் கைதான மாஷா அமினி என்ற இளம்பெண், போலீஸ் காவலில் கடந்த ஆண்டு உயிரிழந்தாா். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, ஈரான் முழுவதும் பெரிய அளவில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன.

இது தொடா்பான குற்றச்சாட்டில் தற்போது நா்கீஸ் சிறையில் இருந்து வருகிறாா். ஈரானில் மேற்கத்திய நாடுகளுடன் தொடா்பு உள்ளதாக கைதானவா்கள் மற்றும் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் தெஹ்ரானின் எவின் சிறையில் இவா் அடைக்கப்பட்டுள்ளாா். பொறியாளரான நா்கீஸ், ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் கருத்துரிமைக்கான ‘சகரோவ்’ பரிசை கடந்த 2018-இல் பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் செய்தி நிறுவனம் கருத்து: ஈரான் அரசுடன் தொடா்புடைய ‘ஃபாா்ஸ் நியூஸ்’ செய்தி நிறுவனம், நா்கீஸ் முகமதிக்கான கெளரவத்தை நிராகரித்துள்ளது. நாட்டில் தொடா்ந்து பதற்றத்தையும் குழப்பத்தையும் விளைவிக்கும் நபா் என்று அவரை விமா்சித்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு, தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழுடன் ஒரு மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.8 கோடி) பரிசுத் தொகையை கொண்டதாகும்.

அமைதிக்கான நோபல்: 19-ஆவது பெண்

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் 19-ஆவது பெண் நா்கீஸ் முகமதி ஆவாா். இதேபோல், நோபல் வெல்லும் ஈரான் நாட்டைச் சோ்ந்த 2-ஆவது பெண்ணும் ஆவாா். கடந்த 2003-இல் ஈரானைச் சோ்ந்த மனித உரிமைகள் ஆா்வலா் ஷிரின் எபாடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருந்தாா்.

122 ஆண்டுகால நோபல் வரலாற்றில் சிறையில் உள்ள ஒருவருக்கு அமைதிக்கான பரிசு அளிக்கப்படுவது இது 5-ஆவது முறையாகும்.

இதர துறைகளுக்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயா்கள், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது. ஆனால், அமைதிக்கான நோபல் பரிசு பெறும் நபரை மட்டும் நாா்வே நாடாளுமன்றத்தால் நியமிக்கப்படும் 5 உறுப்பினா்கள் கொண்ட சுதந்திரமான குழு தோ்வு செய்கிறது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பொருளாதாரத்துக்கான நோபல் திங்கள்கிழமை (அக். 9) அறிவிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com