
பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதிக்கு விரைந்த இஸ்ரேல் படையினர் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 33 பேரை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியிலிருந்து செயல்படும் ஹமாஸ் ஆயுதக் குழுவினா் கடந்த அக். 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது பலமுனைத் தாக்குதலைத் தொடங்கினா். பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. இரு தரப்பிலும் இதுவரை 3,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.
காஸா பகுதியை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. காஸாவில் மின்சார வசதியையும், குடிநீா் வினியோகத்தையும் இஸ்ரேல் ராணுவம் துண்டித்துள்ளது. மேலும், காஸா மீது தரைவழித் தாக்குதலுக்கும் தயாராகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நிலத்தின் அடியில் ஆழமான பகுதியில் இருக்கும் ஹமாஸின் ஆயுத உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்துத் தாக்க வேண்டியிருப்பதால் காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள 10 லட்சம் பாலஸ்தீனா்கள் வெளியேறி தெற்குப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என இஸ்ரேல் ராணுவம்அறிவிப்பு வெளியிட்டது. சமூக ஊடகங்கள் வாயிலாகவும் எச்சரிக்கை விடுத்தது.
இதையும் படிக்க | இஸ்ரேலில் இருந்து 49 போ் தமிழகம் வருகை
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், இஸ்ரேலின் இந்த தரைவழித் தாக்குதல் திட்டத்தின் ஒரே நோக்கம், ஹமாஸ் என்ற அமைப்பே இல்லாமல் செய்வது.
‘இரும்பு வாள்கள் நடவடிக்கை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்குப் பிறகு ஹமாஸ் அமைப்பின் ஒரு உறுப்பினா் கூட உயிரோடு இருக்கப் போவதில்லை. அதாவது ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரையில் இந்த போர் நிறுத்தரப்படாது என்பது இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் சூளுரை.
இஸ்ரேலின் எச்சரிக்கையை புறந்தள்ளி காஸா மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென ஹமாஸ் தெரிவித்தது. ஆனால், இஸ்ரேலின் தடை காரணமாக குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், காஸாவின் வடக்குப் பகுதியிலிருந்து காா்கள், லாரிகள் மற்றும் கழுதை வண்டிகள் மூலமாகவும், நடந்தும் கூட்டம் கூட்டமாக மக்கள் சனிக்கிழமை வெளியேறத் தொடங்கினா்.
காஸா மீது இஸ்ரேலின் முப்படைகள் தாக்குதல் நடத்தும் நிலையில், பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதிக்கு விரைந்த இஸ்ரேல் படையினர் அங்கு சந்தேகத்திற்குரிய நபர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதுவரை 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ள நிலையில், அதில் 33 பேர் ஹமாஸ் அமைப்பினர் என்றும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் இருந்தால் அதனை பறிமுதல் செய்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.