தகன இல்லத்தில் அழுகிய நிலையில் 189 உடல்கள்! அமெரிக்காவில் அதிர்ச்சி!!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இறந்தவர்களின் உடலை  எரியூட்டும் தகன இல்லத்தில் அழுகிய நிலையில் 189  உடல்கள்  கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
அழுகிய நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட தகன இல்லத்தில் அதிகாரிகள்.
அழுகிய நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட தகன இல்லத்தில் அதிகாரிகள்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இறந்தவர்களின் உடலை  எரியூட்டும் தகன இல்லத்தில் அழுகிய நிலையில் 189  உடல்கள்  கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொலராடோவின் பென்ரோஸ் என்ற சிறிய நகரத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் இறந்த உடல்களை தகனம் செய்யும் 'ரிட்டர்ன் டூ நேச்சர்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

2017-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் உரிமையாளர்கள் ஜான் ஹால்போர்டு மற்றும் அவரது மனைவி கேரி ஹால்போர்டு. 

ரசாயன திரவங்களைப் பயன்படுத்தி எம்பாமிங் செய்யாமல் வைத்திருந்து இயற்கையான முறையில் உடல் தகனம் என இந்த அமைப்பு விளம்பரப்படுத்தி இறந்தோரின் உடல்களைத் தகனம் செய்து வந்துள்ளது. 

இந்நிலையில் சமீபத்தில் அந்த கட்டடத்தில் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்ததையடுத்து அங்கு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் அழுகிய நிலையில் ஏராளமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

துர்நாற்றம் வெளியான பின்னர், இறுதிச் சடங்கு மற்றும் தகனப் பதிவு அலுவலகத்தின் இயக்குநர், 'ரிட்டர்ன் டூ நேச்சர்' அமைப்பின் உரிமையாளருடன் பேசியுள்ளார். அதன் பின்னர் தகன இடத்தில் பிரச்சினை இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

முதலில் 115 உடல்கள் இருப்பதாகக் கடந்த வாரம் கூறப்பட்ட நிலையில் தற்போது அழுகிய நிலையில் 189 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 4 ஆம் தேதியன்று இந்த உடல்களை அதிகாரிகள் கண்டனர். 

'ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்' குழுவின் உதவியுடன் இந்த உடல்களை அடையாளம் காணும் பணி கடந்த வாரம் தொடங்கியுள்ளது. கண்டெடுக்கப்பட்ட அழுகிய உடல்களை அடையாளம் காண சில வாரங்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். 

'ரிட்டர்ன் டூ நேச்சர்' அமைப்பின் உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக வரி செலுத்தவில்லை. இதனால் அவர்களின் சொத்துகளில் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

பென்ரோஸ் தகன இல்லத்தின் பதிவு காலாவதியாகி 10 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ளது. ஆனால், இப்போதுதான் வரி செலுத்தவில்லை என்று கூறி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். மேலும் பதிவு காலாவதி ஆகியும் அவர்கள் இறந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்கியுள்ளனர். 

கொலராடோ சட்டத்தின் கீழ், இயற்கையான பசுமையான முறையில் உடல்களை அடக்கம் செய்வது சட்டப்பூர்வமானது, ஆனால் 24 மணி நேரத்திற்குள் புதைக்கப்படாத எந்தவோர் உடலையும் சரியான முறையில் குளிரூட்டி வைத்திருக்க வேண்டும். 

மேலும் கொலராடோ மாகாணத்தில் இறுதிச் சடங்கு, தகனம் செய்வதற்கு இது போன்ற நிறுவனங்களுக்கான அனுமதி, கடுமையான விதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது இந்த தகன இல்லத்தில் கடந்த சில மாதங்களில் தங்கள் உறவினர்களின் உடல்களை தகனம் செய்தவர்கள் மாகாண சட்ட அமலாக்கத்துறையை தொடர்பு கொண்டு வருகின்றனர். இதுவரை 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளனர். 

உடல்கள் கண்டெடுக்கப்பட்ட பின்னர் ஜான், கேரி ஹால்போர்டு இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், அவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. 

இந்த 189 உடல்களுக்கும் பதிலாக, உடல்கள் எரியூட்டப்பட்டுவிட்டதாகக் கூறி, அவர்களின் உறவினர்களுக்கு போலியாக அஸ்தி கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இறந்த தங்களின் உறவினர் முறையாக தகனம் செய்யப்பட்டுள்ளதாக நம்பிய குடும்பத்தினர்களுக்கு மட்டுமின்றி கொலராடோ மாகாணத்திற்கே இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com