வாடிகன் கூட்டத்தில் முதல்முறையாக வாக்களிக்கும் பெண்கள்!

கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் போப் பிரான்சிஸின் தலைமையின் கீழ் நடைபெறும் வாடிகன் கூட்டத்தில் முதல்முறையாக பெண்கள் பங்கேற்று வாக்களிக்க உள்ளனர். 
வாடிகன் கூட்டத்தில் முதல்முறையாக வாக்களிக்கும் பெண்கள்!

கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் போப் பிரான்சிஸின் தலைமையின் கீழ் நடைபெறும் வாடிகன் கூட்டத்தில் முதல்முறையாக பெண்கள் பங்கேற்று வாக்களிக்க உள்ளனர். 

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போப் ஆண்டவர் இருக்கிறார். இவர் போப் பிரான்சிஸ் என்றும் அழைக்கப்படுகிறார். வாடிகன் நகரின் தலைவர் இவரே. இத்தாலி நாட்டின் ரோம் நகரிலுள்ள தன்னாட்சியுடைய சுதந்திர நகரம்தான் வாடிகன். 

ஆர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ, கத்தோலிக்க திருச்சபையின் 266-வது போப் ஆண்டவராக கடந்த 2013 முதல் இருக்கிறார். 

போப் ஆண்டவருக்குக் கீழ் கர்தினால்கள், பிஷப், பாதிரியார்கள் உடனூழியர்கள்(டீக்கன்) போன்றோர் உள்ளனர். கர்தினால்கள்தான் போப் ஆண்டவரைத் தேர்வு செய்கின்றனர். கர்தினால்களில் ஒருவர் போப் ஆண்டவராக தேர்வாகிறார். 

இந்நிலையில் போப் பிரான்சிஸின் தலைமையின் கீழ் நடைபெறும் வாடிகன் கூட்டத்தில் கத்தோலிக்க திருச்சபை குறித்த முக்கிய முடிவுகளில், பல்வேறு பதவிகளில் உள்ள ஆண்கள் மட்டுமே வாக்களித்தது வந்தனர். பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரப்பட்டு வந்தது. 

அந்த வகையில் முதல்முறையாக வாடிகன் கூட்டத்தில் பெண்கள் பங்கேற்று வாக்களிக்கவிருக்கின்றனர். 

சுமார் 2,000 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த கூட்டத்தில் பெண்கள் பங்கேற்பது வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. 

இதற்காக வாடிகனில் அக்டோபரில் 4 வாரக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் சீர்திருத்தங்கள், புதிய விதிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 

திருமணமான பாதிரியார்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், விவாகரத்து மற்றும் மறுமணம் செய்தவர்களுக்கான சடங்குகள், தேவாலயங்களில் பெண்களின் பங்கு உள்பட ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்திருந்தார். வருகிற அக்டோபர் 29 ஆம் தேதி இந்த கூட்டம் முடிவடைகிறது. 

இந்த கூட்டத்தில் முதல்முறையாக 365 பிஷப்புகளுடன் 54 பேர் பெண்களும் வாக்களிக்க உள்ளனர். 

முன்னதாக, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்திலேயே கத்தோலிக்க திருச்சபையில் பெண்களின் பங்கு குறித்து பேசப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்தது, இப்போது வாடிகன் கூட்டத்தில் நடைமுறைக்கு வருகிறது.

அதாவது இந்த கூட்டத்தில் 'தேவாலயங்களில் பெண்களின் பங்கு' முக்கிய பிரச்னையாக வெளிப்பட்டு நிர்வாகப் பதவிகளில் பெண்கள் அதிக அளவில் இருக்க வேண்டும், அவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவாலயங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளைச் சரிசெய்வது குறித்தும் பேசப்பட்டது. பெண்கள் உடனூழியர்களாக(டீக்கன்) நியமிக்கப்பட வேண்டும் என்று சில நாடுகள் வலியுறுத்தியுள்ளன. 

இந்த கூட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வலியுறுத்தப்பட்டாலும் நடைமுறைக்கு வர தாமதம் ஆகலாம் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். 

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞர் ஹெலினா ஜெப்சென்-ஸ்பஹ்லர் கூறுகையில்,  சில பாதிரியார்கள், பிஷப்புகள், கர்தினால்கள் பெண்கள் முன்னேற்றத்தை வெளிப்படையாக ஆதரித்ததாகவும் சிலர் பெண்களை பாதிரியார்களுக்கு கீழ் உடனூழியர்களாக(டீக்கன்) நியமிக்க ஆதரவு தெரிவித்ததாகவும் கூறினார்.  மேலும் பெண்களின் பங்கு குறித்து சிறப்பான விவாதங்கள் நடைபெற்றதாகவும் இதனால் மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறினார்.  

பல ஆண்டுகளாக கத்தோலிக்க பெண்கள் தேவாலயத்தின் பணிகளில் சமத்துவத்தை ஏற்படுத்தவும் தங்கள் குரலை வெளிப்படுத்தவும் முயற்சித்து வருகின்றனர். எனினும் பெண்களை உடனூழியர்களாக, பாதிரியர்களாக நியமிக்க எதிர்ப்பு இருந்து வருகிறது. 

உடனூழியர்கள் பிரசங்கம், திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் ஞானஸ்நானம் போன்றவற்றைச் செய்ய முடியும். ஆனால் பாதிரியார்கள் மட்டுமே வழிபாட்டுக் கூட்டம் நடத்த முடியும். 

பெண்களை உடனூழியர்களாக நியமிக்கும்போது அவர்கள் பாதிரியர்களாக உயர்வு பெறவும் வாய்ப்புள்ளது, எனவே இது பல ஆயிரம் ஆண்டுகள் கடைப்பிடித்த தேவாலய கோட்பாட்டை மீறும் செயல் என்று சிலர் விமர்சிக்கின்றனர். 

கர்தினால் ஜெர்ஹார்ட் முல்லர் என்பவர் கூறுகையில்,  'பெண்களை உடனூழியர்கள், பிரஸ்பைட்டர்கள், பாதிரியார்கள், பிஷப்கள் என புனிதப்படுத்துவது சாத்தியமில்லை என்று கூறினார்.

இருப்பினும் சுவிஸ் கத்தோலிக்க நிவாரண நிறுவனத்தில் பணிபுரியும் ஜெப்பசென்-ஸ்பஹ்லர், உள்ளூர் தேவாலயங்களில் பெண்களின் பங்கு மிகப்பெரிய அளவில், சிறந்த அங்கீகாரம் பெற வேண்டும் என்பதையே வாடிகன் கூட்டம் வெளிப்படுத்தியது என்றார்.

பெண்கள் ஏற்கனவே தேவாலயங்களின் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். மேலும் பல நாடுகளில் பாதிரியார்கள் இல்லாத இடங்களில் திருச்சபைகளை நடத்துவதும் மத பொறுப்புகளை நிர்வகிக்கவும் செய்கிறார்கள். 

தற்போது 10 ஆண்டு காலமாக போப் பிரான்சிஸாக இருக்கும் ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ (Jorge Mario Bergoglio) பெண்களுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். தேவாலயத்தில் பெண்கள் அதிகம் பங்கு வகிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டு பெண்களுக்காக சில சட்டங்களை மாற்றினார். வழிபாட்டுக் கூட்டத்தின்போது ஒற்றுமையைப் பரப்ப சேவை செய்ய, பெண்கள் பைபிள் வாசிக்க அனுமதித்தார். 

மேலும் வாடிகன் அலுவலகங்களில் பெண்களை பணிக்கு நியமித்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நதாலி பெக்வார் என்பவரைபேரவையின் உயர் அதிகாரிகளில் ஒருவராக நியமித்தார். ஆனால் சிலர் இதனை எதிர்த்தனர். 

இவ்வாறு சில எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தேவாலயங்களில் பெண்களின் பங்கை அதிகப்படுத்த போப் பிரான்சிஸ் முயற்சிக்கும் நிலையில், அடுத்தகட்டமாக வாடிகன் கூட்டத்தில் பெண்கள் வாக்களிக்க உள்ளனர். 336-12 உறுப்பினர்கள் தகுதியானவர்கள் என்று கத்தோலிக்க பேரவை கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com