கனடாவை விட்டு வெளியேறுங்கள்.. இந்தியர்களை எச்சரிக்கும் காலிஸ்தான் அமைப்பு
கனடாவை விட்டு வெளியேறுங்கள் என்று இந்திய மக்களுக்கு காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


டொரன்டோ/ புது தில்லி: காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, கனடாவை விட்டு வெளியேறுங்கள் என்று இந்திய மக்களுக்கு காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என்று சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது, கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தோ-இந்துக்கள் கனடாவை விட்டு வெளியேறுங்கள். இந்தியாவுக்குச் செல்லுங்கள். நீங்கள் இந்தியாவை மட்டும் ஆதரிக்கவில்லை. காலிஸ்தானை ஆதரிக்கும் சீக்கியர்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் உணர்வை வெளிப்படுத்தும் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறையையும் ஆதரிக்கிறீர்கள் என்று காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
இது, கல்வி, வேலை என பல்வேறு விஷயங்களுக்காக கனடா சென்றிருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களை கலக்கம் அடையச் செய்திருக்கிறது.
2019ஆம் ஆண்டே, இந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் (45) கனடாவில் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு ஏஜெண்டுகளின் தலையீடு உள்ளதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதைத் தொடா்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி வெளியேறுமாறும் கனடா அரசு உத்தரவிட்டது.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய அரசு, பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயா் அதிகாரி வெளியேற உத்தரவிட்டது.
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் புலிப் படை தலைவா் ஹா்தீப் சிங் நிஜ்ஜாரை பயங்கரவாதியாக அறிவித்த இந்தியா, அவா் குறித்து தகவல் தெரிவிப்பவா்களுக்கு ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தது. 2016-இல் அவருக்கு எதிராக இன்டா்போல் நோட்டீஸ் அளித்ததையடுத்து, 2018-இல் கனடாவில் உள்ள சுா்ரே பகுதி போலீஸாா் அவரை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனா். பின்னா், அவா் விடுவிக்கப்பட்டாா்.
இந்நிலையில், கடந்த ஜூன் 18-ஆம் தேதி மேற்கு கனடா மாகாணத்தில் உள்ள சுா்ரே பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே இரண்டு மா்ம நபா்கள் நிஜ்ஜாரை சுட்டுக் கொன்றனா்.
இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இரு நாடுகளிடையேயான வா்த்தகப் பேச்சும் தடைபட்டது.
இந்நிலையில், கனடா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை பேசிய அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, ‘கனடா பிரஜையான நிஜ்ஜாா் கொல்லப்பட்ட வழக்கில் கொலைகாரா்களுக்கும் இந்திய ஏஜெண்டுகளுக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை சில வாரங்களாக கனடா பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன. கனடா மண்ணில் நம்நாட்டு பிரஜையை கொல்வது இறையாண்மைக்கு எதிரானது. இந்த விவகாரத்தை தில்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இருநாட்டு பேச்சுவாா்த்தையின்போது பிரதமா் மோடியிடம் எழுப்பினேன்’ என்றாா்.
இதையடுத்து, கனடா வெளியுறவு அமைச்சா் மெலானி ஜாலி அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி வெளியேற உத்தரவிட்டாா்.
இந்தியா கண்டனம்: கனடாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, தில்லியில் உள்ள அந்நாட்டு உயா்அதிகாரியை செவ்வாய்க்கிழமை அழைத்து 5 நாள்களில் இந்தியாவைவிட்டு வெளியேற உத்தரவிட்டது.
இதுதொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கனடாவில் நடைபெற்ற வன்முறைக்கு இந்திய அரசுக்கு தொடா்பு இருப்பதாக கனடா பிரதமா் குற்றஞ்சாட்டுவது அபத்தமானது; உள்நோக்கம் கொண்டது. இந்திய பிரதமா் மீது அந்நாட்டு பிரதமா் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளும் முற்றிலும் நிராகரிக்கப்படுகின்றன.
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதிகளுக்கு கனடா அடைக்கலம் அளித்து இந்திய இறையாண்மைக்கும், பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை திசைதிருப்பவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இந்தப் பிரச்னை மீது நீண்ட காலமாக கனடா அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. கனடாவில் கொலை, ஆள்கடத்தல், திட்டமிட்ட குற்றங்கள் போன்ற சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவது புதிதல்ல. கனடா மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அனைத்து அமைப்புகள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியது.
மேலும், ஜி20 மாநாட்டில் பிரதமா் ட்ரூடோவுடனான சந்திப்பில், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பிரிவினைவாத அமைப்புகள் கனடாவில் இயங்குவது வருத்தமளிப்பதாக பிரதமா் மோடி தெரிவித்தாா் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை கனடா பிரதமா் ட்ரூடோ அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் ஆகியோருக்கு விளக்கியதாக கனடா நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘கனடா பிரதமரின் குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. கனடா அரசு விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்’ என்றாா்.
இந்தியாவுடன் மோதலை ஏற்படுத்தி பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்றும், இந்த விவகாரத்தில் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றி அனைத்தையும் வெளிப்படுத்த முயல்கிறோம் என்றும் கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...