ஜெர்மனியை முடக்கிய பனிப்புயல் - புகைப்படங்கள்

ஜெர்மனியின் முனிச் நகரில் தொடர்ந்து வீசிவரும் பனிப்புயல் காரணமாக, அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு நகரமே ஒட்டுமொத்தமாக முடங்கியிருக்கிறது.
ஜெர்மனியை முடக்கிய பனிப்புயல் - புகைப்படங்கள்


பெர்லின் : ஜெர்மனியின் முனிச் நகரில் தொடர்ந்து வீசிவரும் பனிப்புயல் காரணமாக, அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு நகரமே ஒட்டுமொத்தமாக முடங்கியிருக்கிறது.

முனிச் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முனிச் நகரில் சனிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு பேருந்து மற்றும் டிராம் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதாகவும், ரயில் தண்டவாளங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளும் பனிப்படலத்தால் மூடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தெற்கு ஜெர்மனியின் பெரும்பாலான பகுதிகளில் பனிப்புயல் வீசி வருவதால் முனிச் விமான நிலையத்தில்  விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறங்குவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சாலைகளில் பனி தேங்கியுள்ளதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலை விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன.

முனிச் மற்றும் உல்ம் நகரங்களில் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தண்டவாளங்களில் தேங்கியுள்ள பனியால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், தொலைதூரம் செல்லும் பயணிகள் நேற்றிரவு முழுவதும் ரயிலிலேயே காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.   

ஜெர்மனி மட்டுமன்றி அதன் அண்டை நாடுகளான ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்திலும் பனிப்புயல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதன்காரணமாக, அங்கு பனிச்சரிவு ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு ஆஸ்திரியாவில் ஒரே இரவில், 50 செ.மீ அளவுக்கு(20 இன்ச்) பனி பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையால் சுவிட்சர்லாந்தின் சுரிச் நகரிலும் விமான சேவை முடங்கியுள்ளது.

பனிப்புயல் காரணமாக சாலைகளில் விழுந்த மரங்களால் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.  பனி மற்றும் அது தொடர்பாக 350 விபத்துகள் நேரிட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.  இதில் சிலருக்கு லேசானது முதல் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

பனிப்புயல் காரணமாக பனிமண்டலங்கள் ஏற்பட்டு, பிறகு அது நிலச்சரிவாக மாறும் அபாயம் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

செக் குடியரசு நாட்டிலும், சாலைப் போக்குவரத்து முடக்கப்பட்டு ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்துகள் சிலது ரத்து மற்றும் சிலது தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிவேக ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com