புறாவைக் கொல்ல முயற்சி: ஓட்டுநர் கைது!

புறாவைக் கொல்லும் நோக்கோடு துரத்திய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புறா | மாதிரி படம் (Pexels)
புறா | மாதிரி படம் (Pexels)

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஓட்டுநர் ஒருவர் காரைப் பயன்படுத்தி புறாவைக் கொல்ல முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

50 வயதான கார் ஓட்டுநர் அட்சுஷி ஓசாவா, காரில் புறா கூட்டத்தைத் துரத்த முயற்சி செய்துள்ளார். அதிர்ச்சியில் புறா ஒன்று உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வன உயிரிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர், சாலைகள் மக்களுக்கானவை. கார் வருவதைக் கவனிக்க வேண்டியது புறாக்கள்தான் எனத் தெரிவித்துள்ளார்.

வரையறைக்குட்பட்ட எண்ணிக்கையில் வேட்டையின புறாக்களைக் கொல்ல ஜப்பானில் அனுமதி உண்டு. மக்களின் வேளாண், வாழ்வாதார பொருள்களுக்குப் புறாக்களால் பாதிப்பு ஏற்பட்டால் உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் புறாக்களைக் கொல்லலாம். ஆனால் பொதுவகை புறாக்களை அங்குக் கொல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டாக்ஸி ஓட்டுநரான அட்சுஷி, சாலையில் இருந்த புறாக்கள் மீது ஏற்றும் நோக்குடன் போக்குவரத்து விளக்குகளில் பச்சை எரிந்தவுடன் காரை வேகமாக செலுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்தைப் பாதசாரி ஒருவர் கவனித்துள்ளார். தொழில்முறை ஓட்டுநரான இவரது இந்தச் செயல் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது எனக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

புறாக்களின் மீதான டோக்கியோவின் இந்தக் கருணை, காகங்கள் விஷயத்தில் மாறானது. தலைநகர் வீதிகளில் ஹோட்டல்களில் இருந்து கொட்டப்படும் மீந்த உணவுப் பொருள்களால் காகங்கள் பெருகுவதாகவும் அதனால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

2001-இல் அப்போதைய ஆளுநர் 30 ஆயிரம் காகங்கள் மீதான போரை அறிவித்தார். இருபது வருடங்களுக்குப் பிறகு தலைநகரில் உள்ள காகங்களின் எண்ணிக்கை 3-இல் 2 பங்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com