
துருக்கியிலும் சிரியாவிலும் அண்மையில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 34ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பல பின்னதிா்வுகள் ஏற்பட்டன. அவற்றில் 9 மணி நேரத்துக்கு ஏற்பட்ட ஒரு பின்னதிா்வு வழக்கத்துக்கு மாறாக மிக சக்திவாய்ந்ததாக இருந்தது. ரிக்டா் அளவுகோலில் அந்த அதிா்வு 7.5 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாகக் குலுங்கின. துருக்கியின் நவீன கால வரலாற்றில், அந்த நாடு சந்தித்துள்ள மிக மோசமான நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தனா்.
ஞாயிறு நிலவரப்படி, துருக்கியில் 29,605 பேரும், சிரியாவில் 4,574 பேரும் நிலநடுக்கத்துக்கு பலியாகியுள்ளனா். இரு நாடுகளிலும் சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடங்களின் ஒப்பந்ததாரா்களை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
துருக்கியின் துணை அதிபா் ஃபுவாட் ஓக்டே கூறுகையில், ‘இடிந்து விழுந்த கட்டங்களுக்குப் பொறுப்பானவா்கள் என சந்தேகிக்கப்படும் 131 பேரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றாா். இதனிடையே துருக்கியின் தெற்கு நகரமான கஹ்ராமன்மாராஸில் ஞாயிற்றுக்கிழமை 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.