பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் அடிதடி? ஹாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பிரிட்டன் இளவரசர் ஹாரி “ஸ்பேர்” என்ற தலைப்பில் வெளியாகவுள்ள அவரது புத்தகத்தில் தனது மூத்த சகோதரரால் எவ்வாறு நடத்தப்பட்டார் எனக் குறிப்பிட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் அடிதடி? ஹாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பிரிட்டன் இளவரசர் ஹாரி “ஸ்பேர்” என்ற தலைப்பில் வெளியாகவுள்ள அவரது புத்தகத்தில் தனது மூத்த சகோதரரால் எவ்வாறு நடத்தப்பட்டார் எனக் குறிப்பிட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2019-ஆம் ஆண்டு தனது மனைவி மேகன் தொடர்பாக மூத்த சகோதரர் இளவரசர் வில்லியத்துடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் அரண்மனைக் கதவில் ஹாரி தனது சகோதரரால் தள்ளிவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று முன் தினம் (ஜனவரி 4) பிரிட்டனின் பிரபல ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

ஹாரி வெளியிடவுள்ள ஸ்பேர் என்ற புத்தகத்தின் ஒரு நகலை அந்த நாளிதழ் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் வருகிற ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் புத்தகத்தை விளம்பரப்படுத்தும் விதமாக ஹாரி இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதாகவும் அதன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புத்தகத்தில் ஹாரி குறிப்பிட்டிருப்பதாக அந்த ஆங்கில நாளிதழில் கூறியிருப்பதாவது: ஹாரியின் சகோதரர் வில்லியம் அவரது சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து, தனது கழுத்தணி (நெக்லஸ்) அறுத்து, கதவில் பிடித்துத் தள்ளினார். நான் நாய்க்கு உணவு கொடுக்க வைக்கப்பட்டிருக்கும் கிண்ணத்தில் விழுந்தேன். அதனால், எனது முகுகில் காயம் ஏற்பட்டது. நான் சற்று நேரத்துக்கு அப்படியே கிடந்தேன். எனக்கு இந்த விஷயம் திகைப்பை ஏற்படுத்தியது. நான் பின்னர் எழுந்து நின்று எனது சகோதரனை (வில்லியத்தை) வெளியேப் போ என்றேன். அதற்கு அவர் முடிந்தால் என்னோடு சண்டையிடு என்றார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். சிறிது நேரத்துக்குப் பின் தான் செய்த செயலை நினைத்து வருந்தியவராக வில்லியம் வந்தார். அவர் என்னை, தான் செய்த செயலை நினைத்து வருந்தும் விதமாகவும், மன்னிப்புக் கேட்கும் விதமாகவும் பார்த்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த ஆங்கில நாளிதழின் செய்தித் தொடர்பாக பிரிட்டன் அரண்மனை தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் தரப்படவில்லை.

வில்லியம் மற்றும் ஹாரி மன்னர் சார்லஸின் மகன்கள் ஆவர். அவர்களது தாய் டயானா கடந்த 1997-ஆம் ஆண்டு பாரிஸில் ஏற்பட்ட கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். சகோதர்கள் இருவரும் தங்களுக்குள் ஒற்றுமையாகவே இருந்து வந்துள்ளனர். ஆனால், சில ஆண்டுகளாக அவர்களுக்குள் அந்த ஒற்றுமை காணமால் போய் மோதல் போக்கு நிலவுகிறது.

ஹாரி மற்றும் மேகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரச குடும்பத்தை விட்டு வெளியேறி கலிஃபோர்னியாவுக்குச் சென்றனர். அதன்பின் பிரிட்டனின் அரச குடும்பத்தின் மீது அவர்கள் இனவெறி குற்றச்சாட்டினை முன்வைத்தனர். ஆனால், அவர்களது குற்றச்சாட்டை அரச குடும்பம் ஏற்க மறுத்தது.

ஹாரியின் மனைவி மேகன் மீதான வெறுப்பினால் அரசக் குடும்பத்திலிருந்து இவ்வாறு நடந்து கொள்வதாக ஹாரி தனது ஸ்பேர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக அந்த ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. 

அந்தப் புத்தகத்தில், வில்லியம் மேகனை, ஒரு முரட்டு குணம் படைத்தவர் எனக் கூறியதாக ஹாரி எழுதியுள்ளார்.

ஹாரி பல்வேறு தருணங்களில் பொது நிகழ்வுகளில் அரச குடும்பம் தன்னைப் பற்றியும், மேகனைப் பற்றியும் தவறான தகவல்களைக் கூறி வருவதாக தெரிவித்திருக்கிறார். அரண்மனையில் பணிபுரிபவர்களை வைத்து பொய்யான கதைகளையும் அவர்கள் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹாரியின் இந்தப் புத்தகத்தில் அவரது அன்பிற்குரிய தாயார் டயானா குறித்தும், கடந்த ஆண்டு உயிரிழந்த அவரது பாட்டி குயீன் எலிசபெத் குறித்தும் தனது நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாரி மற்றும் மேகன் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின், 2020-ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் பிரிட்டன் அரசக் குடும்பத்திலிருந்து வெளியேறி தங்களை அரசப் பொறுப்புகளிலிருந்து விடுவித்துக் கொண்டு கலிஃபோர்னியாவுக்கு இடம் பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com