

டிவிட்டர் நிறுவனத்தின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இலச்சினை (லோகோ) சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
டிவிட்டர் நிறுவனத்தின் புகழ்பெற்ற நீலநிறக் குருவியின் இலச்சினைக்கு பதிலாக, கருப்பு - வெள்ளை நிறத்தில் எக்ஸ் என்ற இலச்சினையை எலான் மஸ்க் கடந்த 24ஆம் தேதி மாற்றினார்.
எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கையை பலர் பாராட்டினாலும், பெரும்பாலானோர் விமர்சித்து வருகின்றனர்.
அதிநவீன சொகுசுக் காா்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா மற்றும் தனியாா் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளரான எலான் மஸ்க், ட்விட்டரை கடந்த ஆண்டு விலைக்கு வாங்கினார்.
டிவிட்டரை வாங்கியது முதலே அதில் பல அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாய் படத்தை டிவிட்டர் இலச்சினையாக மாற்றினார்.
அதனைத் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு முன்பு நீலநிறக் குருவி இலச்சினைக்கு பதிலாக எக்ஸ் இலச்சினையை மாற்றினார். தற்போது அதிலும் சிறு மாற்றங்களை செய்து சற்று அடர்த்தியான எக்ஸ் எழுத்துருவை இறுதி செய்துள்ளார்.
டிவிட்டரின் இந்த புதிய இலச்சினையை வடிவமைத்தவரும் ஒரு டிவிட்டர் பயனர்தான். சாவ்யர் மெர்ரிட் என்ற டிவிட்டர் பயனாளி வடிவமைத்த இலச்சினையையே எலான் மஸ்க் டிவிட்டரின் நீலநிறக் குருவிக்கு மாற்றாக தேர்வு செய்துள்ளார்.
அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சமூக வலைதள செயலியை உருவாக்கும் பணியில் எலான் மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார். அதில், இணைய வழி வணிகம், பணப் பரிவத்தனை இன்னும் பல அம்சங்களை உள்ளடக்கிய சமூக வலைதள செயலியாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.