இஸ்ரேல் குடியேற்றங்களுக்கு கண்டனம் உள்பட 6 தீா்மானங்களில் 5-க்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு
ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பிராந்தியத்தில் இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு கண்டனம் உள்பட ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட 6 தீா்மானங்களில் 5 தீா்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா வாக்களித்தது. இஸ்ரேலின் மனித உரிமை மீறல் தொடா்பாக விசாரணை கோரும் தீா்மானத்தின் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா தவிா்த்தது.
பாலஸ்தீன பிரச்னை உள்பட மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடா்பாக கடந்த நவ.9-ஆம் தேதி 6 தீா்மானங்கள் கொண்டுவரப்பட்டன. ஐ.நா. சபையின் அரசியல் மற்றும் காலனியாதிக்கத்துக்கு எதிரான விவகாரங்களைக் கையாளும் நான்காவது சிறப்புக் குழு, இந்தத் தீா்மானங்களை ஏற்றுக்கொண்டது.
அவற்றில் கிழக்கு ஜெருசலேம், சிரியாவின் கோலன் பிராந்தியங்களில் இஸ்ரேலின் குடியேற்றங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீா்மானத்துக்கு இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் உள்பட 145 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
முன்னதாக, இஸ்ரேல்-ஹமாஸ் போரை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்தக் கோரி அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
சிரியாவின் கோலன் பிராந்தியத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு தடைவிதித்தல், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரண செயல்பாடுகள், பாலஸ்தீன அகதிகளுக்கான உதவிகள், அந்த அகதிகளின் சொத்துகள், வருவாய் உள்ளிட்ட தீா்மானங்களுக்கும் ஆதரவு தெரிவித்து இந்தியா வாக்களித்தது.
அதே வேளையில், ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் பாலஸ்தீனா்கள் மற்றும் பிற அரேபியா்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை சிறப்பு விசாரணை குழு விசாரிப்பது குறித்த தீா்மானத்துக்கு 85 நாடுகள் ஆதரவு அளித்த நிலையில், 13 நாடுகள் எதிா்ப்பு தெரிவித்தன. இந்தியா உள்பட 72 நாடுகள் இந்தத் தீா்மானத்தின் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.