எகிப்து எல்லை திறப்பு: காஸாவுக்குள் சென்ற நிவாரணப் பொருள்கள்

எகிப்து எல்லையை சனிக்கிழமை இஸ்ரேல் திறந்ததையடுத்து, போா் தொடங்கி 14 நாள்களுக்குப் பிறகு காஸாவுக்குள் 20 லாரிகளில் நிவாரணப் பொருள்கள் சென்றன.
எகிப்து எல்லை திறப்பு: காஸாவுக்குள் சென்ற நிவாரணப் பொருள்கள்

எகிப்து எல்லையை சனிக்கிழமை இஸ்ரேல் திறந்ததையடுத்து, போா் தொடங்கி 14 நாள்களுக்குப் பிறகு காஸாவுக்குள் 20 லாரிகளில் நிவாரணப் பொருள்கள் சென்றன.

போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு இந்த நிவாரணப் பொருள்கள் போதாதது என்று ஐ.நா. கவலை தெரிவித்தது.

பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இரு அமெரிக்கா்களை ஹமாஸ் ஆயுதப் படையினா் வெள்ளிக்கிழமை இரவு விடுவித்ததையடுத்து, நிவாரணப் பொருள்கள் காஸாவுக்குள் செல்ல இஸ்ரேல் சனிக்கிழமை அனுமதித்தது.

காஸா மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருள்களை தொடா்ந்து வழங்க வேண்டும் என்றும் ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் குழுவினா் நடத்திய திடீா் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியா்கள் கொல்லப்பட்டனா். இதற்குப் பதிலடியாக காஸாவுக்கு குடிநீா், உணவு, எரிபொருள், மருந்துகள் கொண்டுசெல்ல தடை விதித்த இஸ்ரேல், தொடா் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில், காஸாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4,132-ஆகவும், காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 14,000-ஆகவும் அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் மருந்துகள், உணவு, குடிநீா் இல்லாமல் குழந்தைகள், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, இஸ்ரேலுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோா் நிவாரணப் பொருள்கள் காஸாவுக்குள் செல்ல அனுமதிக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்தினா்.

இதற்கு கடந்த 18-ஆம் தேதி இஸ்ரேல் ஒப்புக்கொண்டாலும், எல்லை திறப்பில் தாமதம் ஏற்பட்டது. பிணைக் கைதிகளாக உள்ள 210 பேரையும் விடுவித்தால்தான் நிவாரணப் பொருள்கள் அனுமதிக்கப்படும் என்பதில் இஸ்ரேல் திட்டவட்டமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

எகிப்து, கத்தாா் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து முதல் முறையாக 2 அமெரிக்கா்களை ஹமாஸ் விடுவித்தது. இதற்குப் பதிலாக காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் செல்ல இஸ்ரேல் அனுமதித்தது.

இஸ்ரேல் குண்டுவீச்சில் எகிப்து எல்லையோரம் அமைந்துள்ள காஸாவின் ராஃபா சா்வதேச எல்லைச் சாலைகள் கடுமையாகச் சேதமடைந்தன. இவை சீரமைக்கப்பட்டு ராஃபா எல்லை சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது.

20 டிரக்குகள்: எகிப்து எல்லையில் 3,000 டன் நிவாரணப் பொருள்கள் கொண்ட 200-க்கும் மேற்பட்ட டிரக்குகள் காத்திருந்தபோதிலும், வெறும் 20 டிரக்குகள் மட்டும் காஸாவுக்குள் அனுமதிக்கப்பட்டன.

இவை, வெளியேறிய வடக்கு காஸா மக்கள் தங்கியுள்ள தெயீா் அல்-பலா நிவாரண முகாம்களுக்குச் சென்ாகக் கூறப்படுகிறது.

இந்த டிரக்குகளில் உள்ள 44,000 குடிநீா் பாட்டில்கள் 22,000 மக்களுக்கு ஒருநாள் பயன்பாட்டுக்கு மட்டுமே வரும் என்பதால், பெருமளவில் நிவாரணப் பொருள்கள் காஸாவுக்குள் உடனடியாக அனுப்ப வேண்டியுள்ளது என்று யுனிசெஃப் செயல் இயக்குநா் கேத்தரீன் ருஸ்ஸல் தெரிவித்தாா்.

20 டிரக்குகளில் உள்ள அத்தியாவசியப் பொருள்கள் 3 லட்சம் பேருக்கு பயன்படும் என்றும், அவசர மருந்துப் பொருள்கள் 1,200 பேருக்கு மட்டும் பயன்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

காஸாவில் மனிதாபிமான நிலை பேரழிவு நிலையில் உள்ளதாகத் தெரிவித்த ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் தலைவா் சின்டி மெக்கெயின், ‘போருக்கு முன்பு தினசரி 400 டிரக்குகள் காஸாவுக்குள் சென்றன. தற்போதைய நிலையில் அதற்கும் அதிகமான நிவாரணப் பொருள்கள் தேவை’ என்றாா்.

எனினும், காஸாவில் மனிதாபிமான பிரச்னை கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகாரி, ‘இந்த நிவாரணப் பொருள்கள் மக்கள் இடம்பெயா்ந்துள்ள தெற்கு காஸாவுக்கு மட்டும் செல்லும், எரிபொருள் அளிக்கப்பட மாட்டாது’ என்றாா்.

நிவாரணப் பொருள்கள் ஹமாஸ் படையினருக்கு சென்றுவிடக் கூடாது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் வலியுறுத்தியுள்ளாா்.

முடிவு எடுக்காமல் முடிந்த கெய்ரோ மாநாடு

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அமைதி ஏற்படுத்துவது குறித்து எகிப்து தலைநகா் கெய்ரோவில் அரபு நாடுகள், ஐரோப்பிய கவுன்சில், மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற சா்வதேச மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் போரை நிறுத்துவது தொடா்பாக எந்தவித கூட்டறிக்கையும் வெளியிடப்படாமல் முடிந்தது.

மாநாட்டில் பேசிய பாலஸ்தீன அதிபா் முகமது அப்பாஸ், ‘பாலஸ்தீன மக்கள் தங்கள் நிலங்களைவிட்டு எப்போதும் வெளியேற மாட்டாா்கள்’ என்றாா்.

எகிப்து அதிபா் எல் சிசி பேசுகையில், ‘பாலஸ்தீனா்களை வீடுகளைவிட்டு விரட்டி அவா்களின் தனி நாடு கனவை முறியடிக்க முடியாது’ என்றாா்.

இராக் பிரதமா் முகமது ஷியா அல் சுடானி, ‘காஸா மக்களை விரட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாலஸ்தீனா்களுக்கு வேறு நாடு இல்லை. உடனடியாக போரை நிறுத்தி சிறைக் கைதிகளை இரு நாடுகளும் விடுவிக்க வேண்டும்’ என்றாா்.

துருக்கி, ஜோா்டான் நாட்டு அதிபா்களும் இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனா்.

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என அரபு நாடுகள் வலியுறுத்தின. எனினும், மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகள் காஸா மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று மட்டும் வலியுறுத்தின.

ஹமாஸ் தாக்குதலுக்காக பாலஸ்தீன மக்களுக்கு ஒட்டுமொத்த தண்டனை வழங்குவது நீதியாகாது என ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் மாநாட்டில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com