இஸ்லாமியர்கள் குறித்து டிரம்ப் சர்ச்சை பேச்சு: வெள்ளை மாளிகை கண்டனம்!

இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய டொனால்ட் டிரம்ப்புக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்தது. 
இஸ்லாமியர்கள் குறித்து டிரம்ப் சர்ச்சை பேச்சு: வெள்ளை மாளிகை கண்டனம்!

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு உடனடியாக வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்தது. 

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற குடியரசுக் கட்சி யூதக் கூட்டணியின் வருடாந்திர உச்சிமாநாட்டில் பேசிய டிரம்ப் “பயணத் தடை உங்களுக்கு நினைவிருக்கிறதா?” இஸ்லாமியர்களுக்கான பயணத்தடையை மீண்டும் கொண்டுவருவேன்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவரது ஆட்சியின் போது விதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கான பயணத் தடை மிகப்பெரிய வெற்றியடைந்தது என்று கூறிய டிரம்ப், கடந்த நான்கு ஆண்டுகளில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை, ஏனென்றால் மோசமானவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றியதே அதற்கு காரணம என்று பேசினார்.

2017-ஆம் ஆண்டில், டிரம்ப் அதிபராக பதவியேற்ற தொடக்கத்தில் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன், ஈராக் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் நுழைவுக்கு அவர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார்.

டிரம்பின் இந்தப் பேச்சுக்கு வெள்ளை மாளிகை உடனடியாக கண்டனம் தெரிவித்தது.  அரேபிய அமெரிக்கர்கள் மற்றும் முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான இந்த அவமானகரமான தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கு நேர்மாறானவை. மேலும் இஸ்லாமோபோபியாவால் பாதிக்கப்பட்ட இதுபோன்ற நபர்களின் பேச்சுகள் ஜனாதிபதி ஜோ பைடனைப் போலவே மனித மாண்பில் நம்பிக்கை கொண்ட அனைத்து அமெரிக்கர்களாலும் கண்டிக்கப்படக் கூடியது என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com